வேலூர்: வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு குறை தீர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு குறை தீர்வு முகாம், காட்பாடி சப்டிவிஷன் காவல் சரகத்திற்கு உட்பட்டது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமை வகிக்க, பல நாட்களாக நிலுவையில் இருந்த புகார்கள் மற்றும் புதிய புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சித்ரா என்ற பெண், தனது அண்ணோடு குறை தீர்க்கும் முகாமிற்கு வந்து அதிகாரிகளிடம், “தான் லத்தேரி அடுத்த செஞ்சி வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். எனது கணவர் கண்ணன் உடல் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், எங்கள் வீட்டின் முன்பு சொந்தமான இடத்தில் தேங்காய் மட்டைகளை அடுக்கி வைத்திருந்தோம்.
அதைப் பார்த்த அருகில் வசிக்கும் ராமச்சந்திரன், அவரது மனைவி பிரேமா ஆகியோர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேங்காய் மட்டைகளை எட்டி உதைத்து கீழே தள்ளி, தகாத வார்த்தையில் பேசினர். இது குறித்து பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற போது எஸ்எஸ்ஐ தண்டபாணி எங்கள் புகாரை ஏற்காமல், எனது உடல் நலம் சரியில்லாத கணவரிடம் தகாத வார்த்தையில் பேசியும், ’ஏண்டா 4 அடி இடம் விட்டா நீ செத்தா போயிடுவே’ என மிரட்டியும் உள்ளார். இதனால் உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட எனது கணவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாங்கள் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ஏற்கனவே மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உடனடியாக பனமடங்கி எஸ்எஸ்ஐ தண்டபாணியை அழைத்தார்.
புகார்களை தெரிவித்துக் கொண்டிருந்த பெண்ணிடமும், அவரது அண்ணனிடமும் தண்டபாணி விவாதத்தில் இறங்கிட, குறை தீர்வு முகாம் பரபரப்பானது. இதனையடுத்து, காவலர் குறித்து மேல் இடத்தில் புகார் தெரிவிக்கப்படும். தேங்காய் மட்டை புகார் குறித்து டிஜிபி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்வார் என அவர் கூறியதை அடுத்து, அங்கிருந்து சென்றனர். இவ்வாறு காவலர் மீது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புகார் கொடுத்து, நேரில் இருவரும் விவாதம் செய்ததால் குறை தீர்க்கும் முகாமில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கைதான 8 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை நிறைவு!