சேலம்: சேலம் அருகே அமைந்துள்ள சேர்வராயன் மலைத்தொடரானது, ஏற்காடு மற்றும் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுடன் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்வதற்கு 20 வளைவுகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில், சந்தேகத்திற்கிடமாக ஒரு பெரிய சூட்கேஸ் கிடந்துள்ளதை, இன்று மதியம் வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக வனத்துறையினர் ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில், ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ் மோகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தேகப்படும்படி கிடந்த சூட்கேஸை வனப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர்.
பின்பு தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் சூட்கேஸை திறந்து பார்த்ததில், அதில் பெண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூட்கேசில் பெண் சடலத்தை மலைப்பாதை வனப்பகுதியில் வீசிச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், சூட்கேஸிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3வது முறையாக தூத்துக்குடியில் களம் காணும் சுயேட்சை பட்டதாரி வேட்பாளர்!