திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகு (வயது 21). பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞரான இவரை அதே கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த நர்மதா (வயது 23) என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
இந்நிலையில் நர்மதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தியாகு, மற்றும் நர்மதாவை அம்பலூர் காவல் துறையினர் வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதியின் விசாரணைக்கு பின் பெண்ணின் விருப்பப்படி, நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து தியாகு தனது மனைவியுடன் வெளியூரில் தங்கியிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்கு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி தியாகுவின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து, தியாகுவை தாக்கி நர்மதாவை அவரது பெற்றோர் மற்றும் அண்ணன்கள் கடத்திச் சென்றதாக தியாகு அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அம்பலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நர்மதாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் நர்மதா பெங்களூரில் இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெங்களூருக்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் அங்கிருந்து நர்மதாவை பத்திரமாக மீட்டு, ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி முன் ஆஜர்படுத்தினர்.
அங்கு நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்த நர்மதா, தன்னை தனது பெற்றோர்கள் கடத்தி செல்லவில்லை என்றும், பெங்களூருரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், தற்போது தனது கணவர் தியாகுவுடன் செல்வதாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: உயிரிழந்த 4 பேருக்கு மானியத்தில் வீடு! ஊராட்சி தலைவர் பல கோடி மோசடி? 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு