தருமபுரி: காரிமங்கலம் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் தருமபுரி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி உள்ளது. அதேபோல் காரிமங்கலம் பகுதி, சவுளுகொட்டாய் கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயதுடைய இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள பெருமாள் என்பவரது கரும்பு தோட்டத்தில் புகுந்து உள்ளது.
இதை அறியாத அவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 20) என்பவர் கரும்பு தோட்டத்திற்கு சென்ற போது காட்டு யானை ஜெயஸ்ரீயை தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பெருமாள், படுகாயம் அடைந்ததை மனைவியை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்காக சென்றுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், அந்த யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியே வராததால், வனத்துறையினர் அப்பகுதியிலேயே முகாமிட்டு, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு எச்சரிக்கை செய்து வருகின்றனர். காட்டு யானை தாக்கி பெண் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தருமபுரியின் அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யானை தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், இன்று காரிமங்கலம் பகுதியில் இளம்பெண் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!