புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பரிமளேஸ்வரன், கலைமணி தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து, கலைமணி பெண் சுகாதார தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் கலைமணி கர்ப்பமடைந்துள்ளார். அதன் பிறகு, கணவர் பரிமளேஸ்வரன் வெளிநாட்டிற்கு வேலைக்காகச் சென்றுள்ளார். இதனை அடுத்து, கலைமணி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், ஏற்கனவே இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், மீண்டும் உருவான கருவில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் (ஆக.14) பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று கருவில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என பரிசோதித்ததாகவும், இந்த சட்ட விரோதமான பரிசோதனையின் மூலமாக, மருத்துவர்கள் கருவில் இருப்பது பெண் குழந்தை என உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, பரிமளேஸ்வரன் - கலைமணி தம்பதி வயிற்றில் இருக்கும் கருவை கலைப்பதற்கு முடிவு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக, வயிற்றில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்த 5 மாத கருவை கலைக்க வெளிநாட்டில் இருந்த கணவர் பரிமளேஸ்வரன் ஒப்புதலோடு, மருத்துவர்கள் கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தகையச் சூழலில், கலைமணி கருக்கலைப்பின் போது உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கலைமணியின் உறவினர்கள் மருத்துவர்கள் தங்களிடம் ஆலோசனை பெறாமல் கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டி, மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் நேற்று (ஆக.15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராகவி மற்றும் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கலைமணி உறவினர்கள் தரப்பில் இருந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஆக.16) காலை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்ரீபிரியா தேன்மொழி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கோமதி, பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் நிறைவாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு தற்காலிக சீல் வைக்கப்பட்டுள்ளதோடு, அந்த மருத்துவமனையின் ஸ்கேன் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: உரிமையாளரை வெட்டிவிட்டு நகைகள் கொள்ளை.. ஆவடி அருகே துணிகரம்.. போலீஸ் தீவிர விசாரணை!