சென்னை: வேலூர் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் காவலர் லோகேஸ்வரி (வயது 23). இவர் தற்போது கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை காவலர் லோகேஸ்வரி கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள டென்ஸ் ஸ்கொயர் மால் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டீ அருந்துவதற்காக சென்ற காவலர் லோகேஸ்வரி கேம்ஸ் வில்லேஜ் சிக்னல் அருகே சாலை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போலீஸ் பூத் மற்றும் பெண் காவலர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காவல் லோகேஸ்வரி வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் காவலர் லோகேஸ்வரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: "வண்டி இல்ல..பவர்கட் பிரச்னையை சரி செய்ய முடியாது" நுகர்வோரிடம் மின் ஊழியர் பேசும் ஆடியோ வைரல்!
அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் லோகேஸ்வரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் தகவல் அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அடையாறு ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (29) என்பதும், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையில் இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் இவர் பிரபல தனியார் கார் விற்பனை செய்யும் ஷோரூமில் மேலாளராக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது காரை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்