ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். ஓட்டுநர் தொழில் செய்து வரும் பிரதீப் குமாருக்கு அனு பல்லவி என்ற மனைவியும், ஐந்து வயது பெண் குழந்தை ஒன்றும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். 25 வயதான அனு பல்லவிக்கு தாளவாடி மலை கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் மூலமாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாளவாடி அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
தாளவாடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அனு பல்லவியை அவசர ஊர்தி மூலமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனு பல்லவி 25 நாட்கள் அவசர சிகிச்சை பெற்று வந்த நிலையில், 25 நாட்களுக்குப் பிறகு கண்விழித்துப் பார்த்த அனு பல்லவியிடம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக தாளவாடி அரசு மருத்துவமனையில் இருதயத்திற்கு செல்லும் குழாயில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தவறான அறுவை சிகிச்சைக்குப் பிறகு அனு பல்லவிக்கு, தினந்தோறும் இருதய கோளாறும், மூச்சு விடுவதில் சிரமமும், மயக்கமும் ஏற்படுவதாகவும், தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் தினந்தோறும் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அனு பல்லவி, தனக்கு நேர்ந்த நிலைமை, மீண்டும் ஒருவருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்றும் தனக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சென்ற பெண்ணுக்கு இருதயத்திற்கு செல்லும் குழாயில் அறுவை சிகிச்சை செய்து, அப்பெண்ணை உயிருக்கு போராடும் நிலைமைக்கு தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: புலிகளை மனிதர்களாகிய நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? - தாளவாடி வனச்சரக அலுவலர் கூறுவது என்ன?