சென்னை: நகைக்கடையில் வேலை பார்த்தபடி, சிறிது சிறிதாக 53 சவரன் தங்க நகையைத் திருடி பெண்ணை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நங்கநல்லுார் 4வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் அமர் (வயது 37). இவர் வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 6) தனது கடையில் உள்ள நகைகளைச் சரிபார்த்த போது, அதில் சிறிய நகைகள், மோதிரம், கம்மல் என 53 சவரன் அதாவது 427 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்ட போது, தன் கடையில் வேலை பார்க்கும் உள்ளகரம், இந்திரா தெருவைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ராம பிரியா (35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நகைகளைத் திருடியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அமர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த பழவந்தாங்கல் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ராம பிரியாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குடும்ப கஷ்டத்திற்காக நகைகளைத் திருடியதாகவும், சிறுகச் சிறுக திரும்பக் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தான் வேலை பார்த்த கடையிலிருந்து கடைசியாகத் திருடிய ஏழு கிராம் நகையை அருகில் உள்ள அடகுக் கடையில் வைத்ததையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஏழு கிராம் நகையை போலீசார் மீட்டனர். பின்னர் ராம பிரியாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மன்னார்குடி ஈக்விடாஸ் வங்கி அடாவடி வசூல்; ரூ.5 லட்சம் அபராதம் விதித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்