தஞ்சாவூர்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. இதனையொட்டி, விஜய் சார்பில் இம்மாநாட்டிற்கு அவரது ரசிகர்களையும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களையும் குடும்பத்துடன் நேரில் அழைக்க முடியாத நிலையில், அவர் சார்பில் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று (செப்.29) காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். அதன் அடிப்படையில், தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணம் சக்கரைப்படித்துறை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இந்த கூட்டத்திற்கு வருகை தந்த, தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, கும்பகோணம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண், புஸ்ஸி ஆனந்த்திடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது அந்த பெண் புஷ்பா, "எனது சகோதரர் தங்கதுரை, விஜய் ரசிகராகவும், அவரது ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் ஆரம்ப காலம் முதல் இருக்கிறார். அந்த மன்றமே எங்களது நேம் போர்டில் (Name Board) தான் செயல்படுகிறது. ஆனால், எனது சகோதருக்கு உரிய முக்கியத்துவம் தராமல் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துள்ளனர். உங்களால் தற்போது நாங்கள் குடும்பத்தோடு தெருவில் நிற்கிறோம்" என்று ஆவேசமாக பேசினார்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மன்ற நிர்வாகிகள் பலர் அவர் பேசுவதை நிறுத்தவும், தடுக்கவும் முயன்றுள்ளனர். மேலும் புஸ்ஸி ஆனந்த், கூட்டத்தை விட்டு விறுவிறுவென எதுவும் கூறாமல் வெளியேறி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: யானைகளுடன் கட்சிக் கொடி.. த.வெ.க-வுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுரை என்ன?
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்குவாதம் செய்த பெண் புஷ்பாவிடம் இது குறித்து கேட்டபோது, "பூவே உனக்காக படம் வந்தபோது விஜய்யின் ரசிகையாகி அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது, அவர் எனக்கு அனுமதி வழங்கி கடிதம் கொடுத்தார்.
அந்த நாள் முதல் தற்போத வரை எங்கள் குடும்பம் விஜய் ரசிகர்களாக இருந்து வருகிறோம். எனது அண்ணன் இதனால் பல இன்னல்களை சந்தித்து, பல கஷ்டங்களுக்கு மத்தியில் ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக வளர்த்தவர் என் அண்ணன்.
ஆனால், நேற்று வந்தவர்கள் எனது அண்ணனை புறம் தள்ளிவிட்டு தங்களை முன்னிறுத்திக் கொண்டு கொண்டாடுவதை கண்டு, மனம் வெதும்பியே நேற்று நடந்த கூட்டத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி கேட்டேன். எங்களை பொறுத்தவரை நாங்கள் கடைசிவரை விஜய்க்காக வாழ்வோம், விஜய்க்காக உயிரையும் விடுவோம்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்