கோயம்புத்தூர்: கோவை மாநகரில் மழை நீர் வடிகால் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், சிறு மழை பெய்தாலே வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம் மற்றும் கிக்கானி பாலம் உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் பொழிந்த கனமழையில், கோவை மாநகரமே தெற்கு, வடக்கு என இரண்டாக துண்டிக்கப்பட்டது. இதில் லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம், கிக்கானி பள்ளி ரயில்வே பாலம் ஆகிய மூன்று இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த இன்னல்களைச் சந்தித்து வருவதால் இதர நிரந்தரத் தீர்வாக, லங்கா கார்னர் பாலத்தின் கீழே ப்ரீ காஸ்ட் தொழில்நுட்பத்தில், ரெடிமேட் கட்டமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1.6 மீட்டர் அகலத்துக்கும், 11 மீட்டர் நீளத்திலும் ரெடிமேட் கான்கிரீட் கொண்டு மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. மழைநீர் நேரடியாக வாலாங்குளத்திற்குச் செல்லும் வகையில், சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்களில் இப்பணிகள் முடிவடைந்து போக்குவரத்து சீர் செய்யப்படும் என கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கோவையில் சிறு மழை பெய்தாலே ரயில் நிலையம், அவிநாசி சாலை, லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்குவதால் இதற்கு தீர்வு காணும் வகையில், சோதனை முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இத்திட்டம் வெற்றி பெற்றால் மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் மழை நீர் வடிகால் செல்லும் பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதனை எடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடுத்த ஒரு வாரத்திற்கு அடை மழை தான்.. வானிலை ஆய்வு மையம் அப்டேட்! - Tn Rain Update