சென்னை: தமிழகத்தில் திமுக - அதிமுக போன்ற அரை நூற்றாண்டுகளாக அரசியலில் வேரூன்றியுள்ள கட்சிகளுக்கு மத்தியில், நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகி முழு நேர அரசியலில் பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய்க்கு, அடுத்த ஓராண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கட்சியை வளர்த்து, கட்சியின் சின்னம், கொள்கை மற்றும் மாற்று அரசியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.
விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அதற்கு அச்சாணியாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. தமிழகத்தை அரை நூற்றாண்டுகளாக ஆண்டு வரும் அதிமுக - திமுக போன்ற கட்சிகளே கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் சூழலில், விஜய் அதற்கு விதிவிலக்காக இருப்பாரா என்பதற்கு வரும் மாநாட்டிலோ அல்லது 2026-இல் பதில் கிடைத்துவிடும்.
இருப்பினும், மற்ற கட்சிகளின் தலைமையில் விஜயுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள மற்ற தலைவர்களுக்கு பிரச்னை இருக்காது என்பதே உண்மை. இந்த நிலையில், நடிகர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியா என்றும், விஜய் கட்சியோடு மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க முற்படுமா உள்ளிட்ட பல கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.
அதேபோல், அண்மையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விவகாரத்தில், விசிக பிரமுகர்கள் மாறி மாறி திமுகவை விமர்சனம் செய்துள்ளனர். அண்மையில், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “2016 தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு பூரண மதுவிலக்கு என்ற வாக்குறுதி தான் காரணம் என உதயநிதி தவறான தகவலை பதிவு செய்துள்ளார். ஆனால், கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது தான் திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்'' என்றார். விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையிலேயே ஆதவ் அர்ஜுனா இதனை பதிவு செய்தார்.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயுடன் விசிக கூட்டணி அமைக்குமா என்றும், சினிமாவில் தனக்குள்ள செல்வாக்கை வைத்து விஜய் கூட்டணியின்றி தேர்தலைச் சந்தித்து கணிசமான வாக்குகளைப் பெறுவாரா என்பது குறித்த கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பதில் அளித்துள்ளார்.
ப்ரியன் கூறியதாவது: அரசியலில் விஜயின் செல்வாக்கு இதுவரை தெரியவில்லை. அவருடைய வாக்கு வங்கி தெரியாத காரணத்தினால் அவரை நம்பி திருமாவளவன் செல்ல மாட்டார். விஜய் தேர்தலில் நின்று தனக்கான வாக்கு வங்கியைக் காண்பித்து விட்டால், அடுத்த முறை கூட்டணி சேர வருவார்கள். முதல் முறையிலேயே விஜய் 30 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்க முடியுமா என்றால் முடியாது. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என்றால் யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி வரும்.
அதிமுக, பாஜகவுடன் விஜய் இணைந்தால் ஊழல் கட்சிகள், மதவாத கட்சிகள் உடன் இணைந்தார் எனக் கூறி விஜயின் அரசியல் வாழ்க்கை காலி ஆகிவிடும். விசிகவுடன் விஜய் இணைந்தால் 4 தொகுதிகளில் வெற்றி பெறுவதுகூட சிரமம். விஜய் தனியாக நிற்பதற்கான கட்டாயம் ஏற்படும். அப்போது தான் அவருடைய வாக்கு வங்கி அவருக்கும் தெரியும், அதன் பிறகு தான் மற்ற கட்சிகளின் பார்வை மாறும்'' என ப்ரியன் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை லண்டன் பயணம்; தமிழக பாஜகவுக்கு ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு!