கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் ஆனைகட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், பொன்னூத்து அம்மன் வனப்பகுதி மற்றும் சின்ன தடாகம் வனப்பகுதியில் இரு வேறு குழுக்களாகப் பிரிந்து, இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தடுக்க வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து காட்டு யானைகளைக் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் புகுந்து வருவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்றிரவு (பிப்.1) 9 யானைகள் கொண்ட கூட்டம், பொன்னூத்து அம்மன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான வாழை மரங்களை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளது.
இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “யானைகள் ஊருக்குள் புகுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், யானைகளால் தங்களுடைய விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமாவதால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். யானைகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்குச் சென்று விட்டனர்.
வனத்துறையினர் மாலை நேரங்களில் வன எல்லையில் முகாமிட்டு, யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும் அல்லது வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் அல்லது ஆழமான அகழி தோண்ட வேண்டும்.
இதனைச் செய்தால் மட்டுமே யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதை தடுக்க முடியும் மற்றும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும்" என தெரிவித்தனர். முன்னதாக, யானைகள் கூட்டம் கூட்டமாக இரவு நேரத்தில் கிராமத்தில் உலா வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் 18-வது சரணாலயமாக ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' - பிரத்யேக தகவல்கள்!