கோயம்புத்தூர்: கரடிமடை பகுதியில் உணவுத் தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரடிமடை, ஆலந்துறை, தீத்திபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில், காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அவ்வாறு வரும் காட்டு யானைகள், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு, அங்குள்ள தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
மேலும், வன எல்லைகளை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கு வரும் யானைகள், அங்கு மாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள தவுடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களையும் சாப்பிட்டுச் செல்கிறது. இதனால், வனத்துறையினர் அப்பகுதிகளில் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கரடிமடை கிராமத்திற்குள் உலா வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, பிளேக் மாரியம்மன் கோயில் பகுதியில், விஷ்ணு என்பவரது தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அங்கு வீட்டின் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நாகம்மாள் (70) என்ற மூதாட்டியை தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. ஈஸியாக நீங்களே அப்டேட் செய்வது எப்படி?
அதனைத்தொடர்ந்து, வீட்டின் உள்ளே இருந்த அரிசியை காட்டு யானை எடுக்க முயன்ற நிலையில், வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த தனலட்சுமி (40) மற்றும் சத்தியா இருவரையும் தாக்கியதில் இருவரும் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை வனத்துறையினர், வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர், யானை தாக்கியதில் காயமடைந்த மூவரையும், 108 ஆம்புலன்ஸ் மூலமாக, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இரவு முழுவதும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
உணவுத் தேடி கிராமத்திற்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு.. காரணம் என்ன?