கோயம்புத்தூர்: தடாகம் அடுத்த தாளியூர் பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் இருந்த தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் தடாகம், மருதமலை, மாங்கரை, பேரூர், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், தடாகம், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், ஊருக்குள் புகும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தடாகம் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனத்திலிருந்து வெளியேறி, அருகே உள்ள குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. எனவே, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இருப்பினும், பல்வேறு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று (பிப்.12) அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தடாகம் அடுத்த தாளியூர் பகுதியில் உள்ள மலர்விழி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியுள்ளது.
பின்னர், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்த யானை, அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் நிலங்களில் புகும் யானைகளால் விவசாய பயிர்கள் முற்றிலும் சேதமடைகிறது. காட்டு யானைகளின் தாக்கத்தால், பலர் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் யானைகள் ஊருக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, நேற்று முன்தினம், தடாகம் இராமநாதபுரத்தில், வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த சிவகாமி என்பவரை யானை தாக்கியுள்ளது. இதில், காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:விருதுகளை வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கே மத்திய அரசு வழங்க வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் எம்பி