கோயம்புத்தூர்: வட கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மதுக்கரை, சாடிவயல், நரசிபுரம், பூண்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கேரள வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து தமிழக வனப்பகுதியில் புகுந்துள்ள இந்த யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, 2 நாள் ஆய்வுப் பணிக்காக கோவை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகளால் அதிகளவில் பயிர் சேதம் ஏற்பட்டு வருவதால், விவசாயிகளின் நலன் கருதி ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் புகா வேலிகள் அமைக்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நரசிபுரம் அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி மலைக் கோயில் வளாகத்திற்குள் நேற்று (நவ.13) மாலை புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை, அங்கு இருந்த தேங்காய், பழக் கடைக்குள் புகுந்தது. இதனைக் கண்ட நபர் அங்கிருந்தவர்கள் பின் வாசல் வழியாக தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். அதுபோல், கோயிலுக்கு வந்த பக்தர்களும் காட்டு யானையை பார்த்து அலறியடித்து ஓடியுள்ளனர்.
இதையும் படிங்க: கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் காட்டு யானைகள்; பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
அதைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் அந்த யானை கடைக்குள் இருந்த தேங்காய், பழங்களை சாப்பிட்டது. பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே தேங்காய் பழக் கடைக்குள் யானை செல்லும் போது "டே கணேசா போ" "அங்கு ஒன்றும் இல்லை.. போ" என அங்கிருந்த பெண்கள் கூறி யானையை விரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்