தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், நொச்சிஓடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது.
இந்த மலை கிராமங்கள் அருகே உள்ள வனப்பகுதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்திருந்தது. அதன் பின்னர், வனத்துறையினர் இந்தப் பகுதியில் வசிக்கும் மலை கிராம பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த கிராமங்களில் எந்த விதமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கும் வனத்துறையினர் அனுமதி வழங்குவது இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல, விவசாயத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், இதனால் கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.
மலை கிராம பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை இந்த மக்களின் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், ஒவ்வொரு முறை தேர்தல் வரும் பொழுதும், இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாக வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து வருகின்றனர் என கூறுகின்றனர்.
இந்த நிலையில் அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் முடிவில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, கிராமங்களில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டி, அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுராந்தகம் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: பொதுநல வழக்ககாக எடுக்க நீதிமன்றம் பரிந்துரை