சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று (மார்ச் 2) மாலை வெளியிட்டுள்ளது. இதனை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். குறிப்பாக, இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்பொழுது பாஜக சார்பில் வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய பட்டியல் என்பது, முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் எனவும், இந்த பட்டியலில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தாலும் கூட, தமிழகத்தைப் பொறுத்தவரையில், இன்னும் பாஜகவுடன் கூட்டணி முடிவாகாத நிலை உள்ளது.
தமிழகத்தில் பாஜக சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஏற்கனவே வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், இன்று (மார்ச் 2) காலை தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இணைவதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதனுடைய தலைவர் ஜான் பாண்டியனுடனும் தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலை உள்ளதால், தமிழகத்தில் பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி! பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!