திருநெல்வேலி: 'எந்தவித பந்தாவும் இன்றி மிக எளிமையோடு மக்களிடம் பழகக்கூடியவர்' என நெல்லை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ள ராமகிருஷ்ணன்(எ) கிட்டு குறித்து அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த சரவணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் இன்று அறிவிக்கப்பட்டார்.
முன்னாள் மேயராக இருந்த சரவணனை எதிர்த்து தொடர்ச்சியாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போராடி வந்த நிலையில், உட்கட்சி பூசல் காரணமாக சரவணன் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. எனவே புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக.5) நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைவசம் வைத்துள்ளன. எனவே திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தான் 25வது வார்டு திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன்(எ) கிட்டுவை (58 வயது) மேயர் வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
யார் இந்த கிட்டு ராமகிருஷ்ணன்?: மிக மிக எளிமையான பின்னணி கொண்ட ராமகிருஷ்ணன் நெல்லை டவுனில் வசிக்கிறார். திமுகவில் 5 முறை வட்ட செயலாளராகவம், மாநகராட்சியில் 3வது முறை கவுன்சிலராகி உள்ளார். ஆனாலும் எந்தவித பந்தாவும் இன்றி மிக எளிமையோடு மக்களிடம் பழகுவார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இவருக்கென சொந்தமாக பைக்கோ காரோ கிடையாது. சைக்கிள் தான் இவரது வாகனம். தினமும் காலை 6 மணிக்கு தனது சைக்கிளில் 25 வது வார்டை வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது வார்டில் மக்கள் பணிகளை ஆய்வு செய்வார். கடைகளுக்கு செல்வது, பஜாருக்கு செல்வது அனைத்தும் சைக்கிளில் தான். மாநகராட்சி மன்ற கூட்டம் செல்ல வேண்டுமென்றால் வாடகை ஆட்டோவில் செல்வார்.
இன்று மேநர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட சைக்கிளில் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்றார். எனவே இவ்வளவு எளிமையான நபரை மேயராக திமுக அறிவித்திருப்பதால் டவுன் பகுதி மக்கள் வியப்பில் உள்ளனர். இந்த நிலையில், மேயரான பிறகும் இதே எளிமையோடு மக்களோடு பழகி மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மறைமுக தேர்தல்: நடைபெறவுள்ள மேயர் தேர்தலுக்கு மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 11.30 வரை மனுவை திரும்ப பெறலாம். 11.45 மணிக்கு மனுக்கள பரிசீலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.