தருமபுரி: 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில், பா.ம.க போட்டியிடுகிறது. நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல்கட்ட பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டு இருந்தார். அதன்படி, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாமக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர் என பல்வேறு நபர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பலமான வேட்பாளர் இல்லை என தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். தருமபுரியில் போட்டியிடும் திமுகவின் ஆ.மணி, அதிமுகவின் அசோகன் ஆகியோரை எதிர்த்து களமிறங்க, பலமான வேட்பாளர் தேவை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணியை, தருமபுரி தொகுதியின் வேட்பாளராக பாமக தலைமை அறிவித்தது.
யார் இந்த சௌமியா அன்புமணி? தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்-ன் மனைவி சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவர்.
1967ஆம் ஆண்டு திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினரான கே.விநாயகத்தின் பேத்தி. விநாயகம் மகள் சித்ரா கிருஷ்ணசாமியின் மகள் ஆவார். பின்னாளில் கிருஷ்ணசாமி நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இதில் கே.விநாயகம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியை ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் சேர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.
சௌமியா அன்புமணியின் சகோதரர் விஷ்ணு பிரசாத், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இத்தகைய பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த சௌமியா அன்புமணி, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கும், சௌமியாவிற்கும் திருமணம் நடைபெற்ற பிறகு, பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்த சௌமியா பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரின் மருமகளானார்.
அன்புமணி ராமதாஸ் உடன் திருமணம் நடைபெற்ற பிறகு, தேவசேனா என்கின்ற பெயர், பின்னாளில் சௌமியா அன்புமணியாக மாறியது. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் 2014ஆம் ஆண்டு போட்டியிட்டார். தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டார். மேலும், 2019ஆம் ஆண்டு தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார்.
இந்த மூன்று தேர்தலிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று, செளமியா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் செல்லாத கிராமங்களுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தவர் சௌமியா அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பாமக குடும்பத்தில் மருமகளாக மாறிய சௌமியா அன்புமணி முதன் முறையாக தேர்தலைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்..பெரியாரை வசைபாடுவது நியாயமல்ல" - டி.எம் கிருஷ்ணாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு - MK STALIN WISHES TM KRISHNA