சென்னை: சவுக்கு சங்கர்... சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிப்பவர்களுக்கும், அரசியல் பேசுபவர்களுக்கும் மிக பரிச்சயமான பெயர்தான் இது. அரசு அதிகாரிகள் முதல் அரசியலாளர்கள் வரை சவுக்கு சங்கர் விமர்சிக்காத ஆட்களே இல்லை.
காவல் துறையில் உயர்நிலை அதிகாரிகளின் மறுபக்கம், அரசு ஆதரவோடு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அமைச்சர்களின் சொத்துக்கள் வரையிலான பல்வேறு விஷயங்களை குற்றச்சாட்டுகளாக வைத்து சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து கொண்டிருந்த சவுக்கு சங்கர், தற்போது பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் பிறந்த சவுக்கு சங்கரின் உண்மையான பெயர் ஆச்சிமுத்து சங்கர். இவரது தந்தை தஞ்சாவூரைச் சேர்ந்தவர்; தாய் திருச்சியை சேர்ந்தவர். சவுக்கு சங்கரின் தந்தை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையில் உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் அந்த வேலை சங்கருக்கு கிடைத்துள்ளது. அரசு வேலையில் ஆண்டுகள் உருண்டோட, மேலதிகாரிகளின் செல்போன் உரையாடலை ரகசியமாக ரெக்கார்டு செய்து கசியவிட்டதற்காக 2008 ஆம் ஆண்டு சவுக்கு சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவர் கீழ்மட்ட ஊழியர்தான் என்றாலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு சர்வீஸில் இருந்த பல அதிகாரிகளின் தொடர்பு சங்கருக்கு ஏற்பட்டது.
'சவுக்கு' வலைதள பின்னணி: அதையடுத்து மேல்மட்ட அதிகாரிகளால் இன்னலுக்கு ஆளாகும் ஊழியர்களின் ரகசிய புகார் பெட்டியாகவே மாறினார் சங்கர். அப்படியான புகார்களை அம்பலப்படுத்த 2010 ஆம் ஆண்டு 'சவுக்கு' என்ற வலைதளத்தை துவங்கிய சங்கர், அரசு அதிகாரிகளின் துஷ்பிரயோகங்களை அதில் கட்டுரைகளாக எழுத துவங்கினார். நாளடைவில் ஆச்சிமுத்து சங்கர், 'சவுக்கு' சங்கராக மாறினார். செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளிலும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சென்சேஷனான டாப்பிக்குகளை பேசியுமம் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தார்.
திமுகவுக்கு எதிராக திரும்பிய சவுக்கு: தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கடுமையாக டார்கெட் செய்த சவுக்கு சங்கர் திமுகவின் அபிமானி என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால், 2021 தேர்தலுக்கு பின்னர் அவரது பார்வை அப்படியே மாறியது. திமுக ஆட்சி அமைந்து சில மாதங்களிலேயே அந்த ஆட்சியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார் சவுக்கு சங்கர். தலைமை செயலர் தொடங்கி, ஸ்டாலினின் மருமகன் சபரீஷன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை குறிப்பிட்ட விவகாரங்களில் டார்கெட் செய்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர் 'தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும், திமுகவினரை பற்றி பேசியதால் தன்னை திட்டமிட்டு திமுக அரசு பழி வாங்குகிறது' என்றும் குற்றம்சாட்டினார். சிறையில் இருந்து விடுதலையானது முன்பைவிட திமுகவை மிக கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பட்டியல் போட்டு பல குற்றசாட்டுகளை கடந்த வாரம் வரை வைத்து வந்தார் சவுக்கு சங்கர்.
தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியின் அபிமானியாக மாறிவிட்டார் என்றும் பேச்சு எழ தொடங்கியுள்ள நிலையில்தான், யூடியூபில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கைது செய்துள்ள சைபர் க்ரைம் போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று வரை கஞ்சா உள்ளிட்ட 6 வழக்குகள் அவர் மீது பாய்ந்துள்ளது.சவுக்கு சங்கர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யூடியூபில் பலர் மீது பல குற்றசாட்டுகளை வைத்திருப்பதால் மேலும் சில அவதூறு வழக்குகள் அவர் மீது பாய வாய்ப்பு உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இதில் எந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் பிற வழக்குகள் அவருக்கு பின்னடைவை தரும் என்றே தெரிகிறது.
இந்த வழக்குகளை எல்லாம் எதிர்கொண்டு ஜாமினில் வெளிவரும் சவுக்கு சங்கர், எப்போதும் போல ஆட்சியையும் அரசு அதிகாரிகளையும் விமர்சிப்பாரா அல்லது அடக்கி வாசிப்பாரா என்பது போகப் போக தான் தெரியும்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல்.. மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது - காரணம் என்ன?