தேனி: தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அடித்து தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி இவருக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் விஜயகுமார் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தேனி ஆயுதப்படை காவலர்கள் இருவர் கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதி விஜயகுமாரை, நேற்று (பிப்.3) மதுரை மத்திய சிறையில் இருந்து காலை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, பிற்பகலில் வழக்கு விசாரணையானது முடிவுற்ற நிலையில், கைதி விஜயகுமாரை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்த காவலர்கள், கைதியுடன் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கைதி விஜயகுமார், காவலர்களை தள்ளிவிட்டு தப்பியோடினார். தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், ஒரு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருடன் 10 காவலர்கள் என ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நேற்று மாலை முதல் பெரியகுளம் பகுதியான அகமலை வனப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தப்பியோடிய சிறை கைதியை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.4) மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் தப்பியோடிய சிறை கைதி விஜயகுமாரை 'தேடப்படும் குற்றவாளி' என அறிவித்து, குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டார். அதோடு தப்பியோடிய கைதியைக் கண்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் சிறை கைதி தப்பியோட்டம்! குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்