சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்ந்தது. இதன்படி, இன்று முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் மற்றும் விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
முன்னதாக, இந்த ஐந்து சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கட்டண உயர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றோடு 2024 மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவும் நிறைவுற்றதால், நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
மேலும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் எதிரொலி; விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அரியலூர் - கடலூர் மேம்பாலப் பணிகள்!