நீலகிரி: குப்பைக்கூளம் என்றவுடன் துர்நாற்றம், நோய் தொற்றுகள் பரவும் இடம் என்று தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இயற்கை எழில் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக சேமிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு இயற்கையான முறையில் உரம் தயாரித்து, பூங்கா அமைத்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் 30 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கிலான குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள், குன்னூர் ஓட்டு பட்டறை பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. குன்னூரில் இயங்கிவரும் கிளீன் குப்பைகள் குப்பைக்குழிகளில் கொட்டப்பட்டு, அதன் மேற்புறம் புற்கள் வளர்க்கப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த குப்பை மேலாண்மைப் பூங்காவை கிளீன் குன்னூர் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் உரங்களைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில், இப்பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுக்களான டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், மேரி கோல்ட், ஸ்வீட், வில்லியம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த பூங்காவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த குப்பைக்கூளம் மேலாண்மை பூங்கா குன்னூர் நகராட்சி நிர்வாகம், கிளீன் குன்னூர் அமைப்பின் சார்பில் நான்காண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து குன்னூர் குப்பை மேலாண்மை பூங்காவை பராமரித்து வரும் டாக்டர் வசந்தன் கூறுகையில், “நான்காண்டுகளாக குன்னூர் குப்பை மேலாண்மை பூங்கா பராமரித்து வருகிறோம். பருவநிலைக்கு ஏற்ப பூச்செடிகளை நடவு செய்வோம். குப்பைகளை வைத்து உரம் தயாரித்து, அந்த உரத்தையே இங்கு வளர்க்கப்படும் செடிகளுக்கு பயன்படுத்துகிறோம். இதனால் இந்த பூங்காவில் பூக்கும் மலர்கள் பிரைட்டாக இருக்கின்றன.
ஆகவே, இந்த உரங்களை மலர் வளர்ப்பில் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் காலங்களில் இப்பகுதியில் காய்கறித் தோட்டங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் கல்லூரிப் பேராசிரியர் ரோஸ்லின் லீமா கூறுகையில், “இந்த பூங்காவை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். நாமும் நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகளுக்கு இந்த இயற்கையான உரத்தினை பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.150 இருந்தால் கொடைக்கானலை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Kodaikanal Tourism