சென்னை: தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1961 ஜூன் 2-ஆம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குமரி அனந்தன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு மகளாக பிறந்த, தமிழிசை செளந்தரராஜன் ஒரு மருத்துவர் ஆவார். தனது தந்தை காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும் கூட தன்னை பா.ஜ.கவில் இணைத்து கொண்டு தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர், தமிழிசை சௌந்தரராஜன்.
கடந்த 1999 ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது அயாராத உழைப்பினால் மாநில தலைவர் பதவி வரை உயர்ந்தார். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தில் முதல் பெண் மாநில தலைவர் என்ற சிறப்பும் தமிழிசை செளந்தரராஜனை சேரும்.
இதனை அடுத்து தமிழகத்தில் பாஜக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் களம் கண்டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஆக்டிவாக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இதுவரை போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட வெற்றி கிட்டவில்லை.
2006 ஆம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி, 2009 ஆம் ஆண்டு வட சென்னை மக்களவை தேர்தலில் தோல்வி, 2011 ஆம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்ற தொகுதியிலும், அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி என இப்படி எல்லா தேர்தலிலும் போட்டியிட்டாலும் கூட வெற்றி வாய்ப்பு என்பது தமிழிசைக்கு எட்டாக் கனியாக இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அவருடைய அயராது உழைப்பிற்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பாஜக தேசிய தலைமை அவருக்கு கடந்த 2019 ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநர் பதவி கொடுத்து அழகு சேர்த்தது. மேலும் அவர் சிறப்பான வகையில் தனது பணியை ஆற்றியதால் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கூடுதல் பொறுப்பாக 2021 முதல் புதுச்சேரி மாநிலமும் வழங்கப்பட்டது.
ராஜினாமா ஏன்?: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் களம் காண்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக மட்டும் இல்லாமல் புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் அவர் உள்ளார். வெறும் ஆளுநராக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மக்களுடன் கலந்துரையாடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழிசை சௌந்தரராஜன் செய்து வந்துள்ளார்.
இதனால் புதுச்சேரியில் வேட்பாளராக தமிழிசை இருக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என பாஜக தலைமை நம்புவதாக தெரிகிறது. அதேபோல் தமிழ்நாட்டில், கன்னியாகுமரியை பொருத்தவரை தமிழிசை சௌந்தரராஜனின் பூர்வீக தொகுதியாக இருப்பதால் தமிழகத்தில் பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது. இதனால் ஏற்கனவே மத்திய இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனும் கூறப்படும் நிலையில் வயது காரணமாக தமிழிசை சௌந்தரராஜன் பெயரும் கன்னியாகுமரி தொகுதியில் அடிபடுகிறது. அப்படி இல்லை எனில் தென் சென்னை, விருதுநகர், நெல்லை ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.