சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசும், இந்த திட்டத்தை மாநில அரசின் திட்டமாக தமிழக அரசு மாற்றி விட்டது. எனவே அதனை முழுக்க, முழுக்க மாநில அரசின் திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசும் கூறியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கீழ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு-மத்திய அரசுக்கு இடையேயான பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் காரணமாக பணிகளில் தாமதம் ஏற்படுமோ என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?
முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. முதல் கட்டத்திட்டம் என்பது மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில் 50:50 என்ற சமபங்கு நிதி பகிர்வு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் மாதம் தோறும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள, மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MoHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டினார்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த மூன்று வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கிலோ மீட்டருக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல், உயர்மட்ட பாதையில், 76 கிலோ மீட்டருக்கு, 80 ரயில் நிலையங்களும், இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனைகளும் அமைக்கபட்டு வருகின்றன. இந்த பணிகள் எல்லாம் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில், பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மெட்ரோ ரயில் சேவை மற்றும் மாநகரப் பேருந்து சேவைகள் மூலம் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. 118.9 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2-க்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையிலும் கூட இந்த இரண்டாம் கட்டத்திட்டத்துக்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இதுவரை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் கட்ட மெட்ரோ திட்டத்தைப் போல இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கு இன்னும் கிடைக்கவில்லை.
மாநில அரசின் திட்டம்: இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையிலும்கூட, இந்த திட்டத்திற்கான முழு செலவினத்தையும் தமிழ்நாட்டின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முழு செலவினத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருக்கின்ற காரணத்தால், தமிழ்நாடு அரசிற்கு மிகக்கடுமையான நிதிச்சுமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மாநில அரசுக்கு இந்த வருடம் மட்டும் ஏறத்தாழ ரூ.12 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது கடந்த திமுக எம்பி தயாநிதிமாறன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டோகன் சாஹூ, சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்டுள்ள 118.9 கி.மீ கொண்ட வழித்தடத்திற்காக கணக்கிடப்பட்ட திட்ட மதிப்பு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய். இது போன்ற அதிக மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு அத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி இருப்பின் தன்மையைப் பொறுத்தே ஒப்புதல் வழங்கப்படும். மேலும் தற்போது சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டமானது மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வருகிறது. எனவே அத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான செலவினத்தை தமிழ்நாடு அரசே தற்போது செலவழித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
கடன் தொகையை பயன்படுத்தாதது ஏன்? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த 21ஆம் தேதி சென்னையில் அளித்த பேட்டியில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு சர்வதேச கடன்களை பெற மாநில அரசுக்கு உதவுவதே பொருளாதார விவகாரத் துறையின் கடமையாகும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. சர்வதேச கடன்களை பெற மத்திய அரசு உதவியுள்ளது. இதுபோல கடனாக பெற்று தந்த நிதியில் ஒரு ரூபாயைக் கூட மாநில அரசு பயன்படுத்தவில்லை. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மாநில திட்டமாக கடந்த 2018ம் ஆண்டே மாற்றி தமிழ்நாடு அரசு முடிவு செய்துவிட்டது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மாநில அரசின் திட்டமாக தமிழ்நாடு அரசு மாற்றிக் கொண்டதால், அதற்கான முழு செலவையும் மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் தாமதமே காரணம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு பதில் அளித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக செயல்படுத்த கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசு காலதாமதம் செய்ததால் கடனுதவி பெற வேண்டி, தமிழக அரசே திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. இதை மத்திய அரசும் ஏற்றது. இத்திட்டத்தை மத்திய அரசு திட்டமாக செயல்படுத்த கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொது முதலீட்டு குழு, மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், 2024-25 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்குவதில், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது மெட்ரோ திட்டப்பணிகளை விரைவாக நிறைவடைய செய்வதில் சிரமத்தை கொண்டுவரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கடன் சுமை அதிகரிக்கும் என அச்சம்: மெட்ரோ ரயில் முதல் கட்டத்திட்டத்துக்கான நிதியை மத்திய அரசே நேரடியாக நிதி உதவி முகமைகளிடம் இருந்து கடனாகப் பெற்று மத்திய அரசின் பங்காக மாநில அரசுக்கு வழங்கியது. ஆனால், இரண்டாம் கட்ட திட்டத்துக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நிதி உதவி அளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, மத்திய அரசின் ஒப்புதல் என்ற விதிமுறையை கருத்தில் கொள்ளாமல் பொருளாதார ஒத்துழைப்புக்கான சிறப்பு நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கடன் வழங்கியது.
எனவே இது மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது என்ற சூழல் ஏற்பட்டது. வெளி முகமைகளின் மூலம் வாங்கப்படும் கடன்கள் மத்திய அரசின் வழியாக வராமல் மாநில அரசின் வழியாகவே வருவதால் மாநில அரசுக்கு நிதி சுமை நேரிட்டு நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின் கீழான கடன் வரம்பு பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் மட்டுமே கடனாக பெற வேண்டும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் மத்திய அரசு துறையின் திட்டம் என்ற பகிர்வுடன் செயல்படுத்தப்பட்டால் மாநில அரசுக்கு நிதி சுமை குறையும். இதனால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மத்திய பொருளாதார விவகாரத்துறையிடம் வைக்கப்பட்ட கோரிக்கையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை மத்திய அரசின் திட்டமாகவும் அதே நேரத்தில் மாநில அரசோடு நிதி பகிர்வு அடிப்படையிலும் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதுவரை இரண்டாம் கட்ட திட்டத்துக்காக ரூ.18,564 கோடியை செலவழித்துள்ளது. இதில் மாநில அரசின் சார்பில் ரூ.11,762 கோடி தரப்பட்டுள்ளது. ரூ.6802 கோடி வெளிநாட்டு நிதி முகமைகள் வழியாக தமிழக அரசு கடனாக பெற்றுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் தாமதம்: இந்த சூழ்நிலையில்தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், " 17.8.2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ், மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும்," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.