சென்னை: காலநிலை மாற்றம் என்பது உலகையே வாட்டிவதைக்கிறது. இந்த காலநிலை மாற்றத்திற்கு எல் நினோ (El-Nino) என்ற வார்த்தை காரணம் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? எல் நினோ என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? அதனால் பாதிப்புகள் உண்டா? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காலநிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் காலநிலை ஆர்வலர் பிரபாகரன், ஈடிவி பாரத் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
எல்-நினோ என்றால் என்ன? எல் நினோ மற்றும் லா நினா ஆகியவை ஸ்பானிய வார்த்தைகள். இதற்கு குழந்தை என்று அர்த்தம். இவை கடலின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களாகும். எல் நினோ மற்றும் லா நினா என்பது கிறிஸ்துவ இயேசு பிறந்த டிசம்பர் மாத காலத்தில் நடைபெறுவதால் ‘குழந்தை இயேசு’ என்ற அர்த்தமும் உள்ளதாக கூறப்படுகிறது.
எல் நினோ கடலின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய வெப்பநிலையை விட அதிகமாக வெப்பமானால், அது கடலின் மேற்பரப்பில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி அங்கு ஏற்படக்கூடிய வெப்பமான காற்றை அருகே இருக்கும் நிலப்பரப்பை நோக்கி நகர்த்தும். இதனால் அந்த நிலப்பரப்பில் கடும் வெப்பம் ஏற்படும்.
எடுத்துக்காட்டாக, பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்து அருகே இருக்கும் நிலப்பரப்பிற்கு நகர்த்துகிறது. இது இந்திய கடற்கரை மற்றும் நிலப்பகுதிகளில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கிறது.
லா-நினா என்றால் என்ன? கடலின் மேற்பரப்பில் அதிகமான குளிர்ந்த காற்று வீசும் போது, கடலின் மேற்பரப்பில் அழுத்தம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று நிலப்பரப்பை நோக்கி நகர்கிறது. இது இந்தியாவில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. இது லா நினா என்றழைக்கப்படுகிறது. எல் நினோவும் மற்றும் லா நினாவும் 3-5 வருடங்கள் சுழற்சி முறையில் நீடிக்கும்.
இந்தியாவை எல்-நினோ பாதிக்குமா? காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் எல்-நினோ மற்றும் லா நினா மிகவும் தீவிரமடைகிறது. எல்-நினோ சூப்பர் எல்-நினோவாக தீவிரமடைந்து மிகப்பெரிய தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும். தற்போது இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் கடுமையான வறட்சி, அதிகளவு வெயில் தாக்கம் ஆகியவை ஏற்பட்டது.
அதிகபட்ச வெப்பநிலை: எல்-நினோ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. பூமியின் சராசரி வெப்பநிலை தற்போது 1.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. பூமியின் அதிகபட்ச வெப்பநிலை ஜூலை 22ஆம் நாளன்று 17.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதான் உலகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலை. வட இந்தியாவில் 54 டிகிரி செல்சியஸ் பதிவாகி ஏற்பட்ட வெப்ப அலை தாக்கத்தால் 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
தரவுகள் இல்லை: இதன் காரணமாக Voyal Reserve என்று சொல்லக்கூடிய தண்ணீரின் இருப்பு அதிகமாக ஆவியாகிறது. இந்தியாவின் தண்ணீர் இருப்பு 33 சதவீதமாக உள்ளது. இதனால் இந்தியாவின் வேளாண்மை அதிக அளவில் பாதிக்கப்படும். இந்த பாதிப்பால் ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் என்று தரவுகள் இல்லை. உணவுப் பொருட்களை விளைவிக்கக்கூடிய விளை நிலங்களையும், உணவுப் பொருளையும் காலநிலை மாற்றம் பாதிக்கும். தக்காளியின் விலை உயர்ந்ததற்கு எல்நினோவும் ஒரு காரணமாக உள்ளது.
லாநினா தொடக்கம்: எல்நினோ தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இனிமேல் லாநினா துவங்கும். குளிர்ந்த காற்று கடலின் மேற்பகுதியில் இருந்து வீசம். இதன் காரணமாக கடும் மழைப்பொழிவு மற்றும் புயல் காற்று ஏற்படவுள்ளது. இதனால், ஒரு வருடத்திற்கு பெய்யக்கூடிய மழை ஒரு மாதத்திலும், ஒரு மாதம் பெய்யக்கூடிய மழை ஒரே நாளிலும் பெய்யும்.
Mitigation vs Adaptation: காலநிலையைப் பொறுத்தவரை இரண்டு செயல்கள் முக்கியமானது. ஒன்று Mitigation, மற்றொன்று Adaptation. காலநிலை மாற்றத்தில் சில விளைவுகள் வராமல் தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் அதற்கு முயற்சி செய்து வருகின்றன. பேரிடரை வராமல் தடுப்பது என்பது கடினம். Mitigation என்பது பேரிடரால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கு முயற்சி செய்வது.
Adaptation என்பது பேரிடர் வந்த பிறகு மக்களிடையே பெரும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மக்களை பாதுகாப்பது. இந்தியா Adaptation-ல் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். குறிப்பாக, வாழ்வாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
வயநாடு நிலச்சரிவுக்கு இதுதான் காரணமா? கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடருக்கு முழுவதுமாக இயற்கையை அழித்து உருவாக்கி இருக்கக்கூடிய எஸ்டேட் மற்றும் கட்டுமானங்கள் தான் காரணம். இயற்கையாக இருக்கும் இடத்தில் நிலச்சரிவு என்பது பெரும்பாலும் வருவதற்கு வாய்ப்பில்லை. அங்கு பயிரிட்டுள்ள தேயிலைச் செடி குறைவான வேரின் நீளத்தைக் கொண்டது. அதற்கு மண்ணை இறுக பிடித்து வைக்கும் தன்மை குறைவு.
ஏற்கனவே அங்கு இருந்திருக்கும் பெரிய மரங்கள் நன்கு மண்ணை இறுகப் பிடித்து வைத்திருக்கும் திறனையும் கொண்டிருக்கும். அவற்றை அகற்றும் போது மண்ணின் இறுக்கமான தன்மை குறைந்திருக்கும். இதுவே அங்கு நிலச்சரிவு நடந்ததற்கு முழு காரணமாகும்" இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 287 ஆக உயர்வு.. கேரளாவுக்கு விரையும் தேசிய தலைவர்கள் - Wayanad landslides