திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே அமைந்துள்ளது ஏர்வாடி. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக கொண்டாப்படும். 800 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்த பண்டிகை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (17/07/2024) நடைபெற்ற சந்தனக் கூடு திருவிழா பழைய ஆர்ப்பாட்டம் இல்லை என்றாலும், செண்டை மேளங்களுடன் நடைபெற்றது.
இந்த பாரம்பரிய திருவிழாவை மீட்டெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த ஹசன் ஹுசைன் முஹர்ரம் கமிட்டியின் தலைவர் தமீம் சிந்தாமதார் கூறுகையில், இப்பகுதியில் நடைபெறும் முஹர்ரம் பண்டிகை 800 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. இப்பகுதியில், 'ஹசன்' என்ற பெயரில் ஒரு தர்காவும், 'ஹூசைன்' என்ற பெயரில் ஒரு தர்காவும் உள்ளன. மொஹரம் பண்டிகை தினத்தன்று மாலை இந்த இரு தர்காக்களில் இருந்தும் சந்தனக்கூடு தெருக்களில் வீதி உலாவாக கொண்டு சென்று, இறுதியில் இரு சந்தனக்கூடும் ஒரு இடத்தில் நேருக்கு நேர் சந்திக்கும். பின்னர், ஊருக்கு வெளியே உள்ள கால்வாய் தண்ணீரில் சந்தனக்கூட்டில் உள்ள சில காகிதங்களை கரைப்பார்கள்.
இஸ்லாமியர்களும் மற்று சமூக மக்களும் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் சகோதரர்களாக இணைந்து இந்த திருவிழாவை கொண்டாடுவோம். ஆனால், கடந்த 2013ஆம் அண்டு ஜாக் அமைப்பினர் இது இஸ்லாமிய கலாச்சரத்தை சார்ந்த பண்டிகை இல்லை என்றும், முழுக்க முழுக்க இந்து மத கலாச்சாரத்தைக் கொண்டது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் சமயத்தில் சடங்குகள் செய்யும் போது அடிதடி தகராறு செய்து, இதனை சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாற்றி தடைவிதிக்க வழிவகை செய்தனர். பொதுவாக இந்த திருவிழாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள். யாருக்கும் இடையூறாகவோ, எந்த பிரச்னையும் இல்லாமல் நடைபெற்று வந்தது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முஹர்ரம் திருவிழாவிற்கு இப்பகுதி மக்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்" எனக் கூறினார்.
800 வருட பாரம்பரியம் தடைபட்டது எப்படி? பொதுவாக சந்தனக்கூடு திருவிழாவின் போது, ஏர்வாடி பகுதி முழுவதும் மக்கள் மத்தியில் திருவிழாக்கோலம் களைகட்டி இருக்கும். ஒருபுறம் சந்தனக்கூடு ஊர்வலம், மறுபுறம் தெருக்களில் ஆங்காங்கே ஏராளமான கடைகள் போடப்பட்டிருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னையை காரணம் காட்டி ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நடைபெற காவல்துறை தடை விதித்தது.
இது ஏர்வாடி மக்களை கவலை அடையச் செய்தது. பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஏர்வாடியைச் சேர்ந்த இளைஞர்கள் நீதிமன்றம் மூலம் மீண்டும் சந்தனக்கூடு திருவிழா நடத்த பல முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக, இந்தாண்டு முதல் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
உரிமையை நிலைநாட்டிய உயர்நீதிமன்றம்: சந்தனக் கூடு திருவிழா தொடர்பாக 16ம் தேதி வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதி சுவாமி நாதன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், "இஸ்லாம் மதத்தை அதன் தூய மற்றும் அசல் வடிவத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தவ்ஹீத் குழுவினர் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் பிரிவு 19 எந்த மதத்தையும் தங்களின் விருப்பப்படி, கலாசாரப்படி பின்பற்ற உரிமை வழங்குகின்றன. நூற்றுக்கணக்கான கிளாசிக்கல் இசைக்கலைஞர்கள் பக்தியுள்ள முஸ்லிம்களாக உள்ளனர் என குறிப்பிட்டார். மனுதாரர் குழு மத ஊர்வலம் செல்வதைத் தடுக்க தவ்ஹீத் ஜமாத்துக்கு உரிமை இல்லை என கூறியதோடு, சந்தனக் கூடு விழாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருந்தனர்.
பாரம்பரியத்தை மீட்டெடுத்த இளைஞர்கள்: நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டனர். அந்த வகையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா நேற்று (ஜூலை 17) நடைபெற்றது.
ஏர்வாடி ஆறாவது தெரு சாவடியில் உள்ள தர்காவில் இருந்து சரியாக மாலை 4.30 மணி அளவில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. அப்போது, தர்காவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சந்தனக்கூடு வாகனத்தில் ஏற்றி ஊர் மக்கள் சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விழாக்கோலம் இந்த ஆண்டு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது ஆடல் பாடல், பாட்டு கச்சேரி போன்ற என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை எந்த ஒரு ஆடம்பர நிகழ்ச்சிகளும் இல்லாமல் மிக எளிமையாக சந்தனக்கூடு ஊர்வலம் மட்டும் நடைபெற்றது. இருப்பினும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடைபெற்றதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இதையும் படிங்க: முஹர்ரம் பண்டிகை; ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாகச் சென்ற இஸ்லாமியர்கள்.. என்ன காரணம்?