சென்னை: முதல்வர் படைப்பகத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது? யாரெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த பல ஆண்டுகளாக இணையதளமே நம்மை முழுவதும் இயக்கி வருகிறது. அதிலும் கொரோனா காலத்தில் ஆன்லைன் பள்ளி,கல்லூரி வகுப்புகள், ஆன்லைன் பயிற்சி மையங்கள், ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பணி செய்வது எல்லாம் சர்வசாதரணமாக மாறிவிட்டது. கரோனாவிற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நேரடியாக திறக்கப்பட்டாலும் கூட ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தபடியே பணி செய்வதை இன்னும் பல நிறுவனங்கள் ஊக்குவித்துகொண்டுள்ளன.
இதேபோல் புதிதாக தொழில் துவங்கும் தொழில்முனைவர்கள் பலர் இடம் வசதி இல்லாமல் சிரமம் அடைந்துவருவதை உணர்ந்த தனியார் நிறுவனங்கள் பலர் பகிர்வு பணியிட மையம் (Co-Working Space ) நடத்தி வருகின்றன. இதை கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் முதல் முறையாக அரசு சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதி அகரம் ஜெகன்நாதன் தெருவில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை வளர்ச்சிக் குழுமமும் இணைந்து ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் பகிர்வு பணியிட மையம் கட்டுப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்கு முதல்வர் படைப்பகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பகிர்வு பணியிட மையத்தை தமிழக முதல்வர் கடந்த 4 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில் தொழில் முனைவர்களுக்கான பகிர்வு பணியிட மையம் , போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்,மாணவிகளுக்காக அனைத்து உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய கல்வி மையம், உணவு அருந்துவதற்கான இடம் என ஏசி,கணிணி,வைஃபை வசதியுடன் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதி: இதுகுறித்து ஈ டிவி பாரத்திடம் பேசிய முதல்வர் படைப்பகம் நிர்வாகி எலன், "போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு படிக்கும் நல்ல சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் தான் முதல்வர் படைப்பகம் துவக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் கல்வி மையம் இருக்கிறது இதில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ -மாணவிகள் ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் வகையிலும்,அவர்களுக்கு தேவையான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் படிக்க கூடிய சூழல் இல்லாத மாணவர்கள் இங்கு முதல்வர் படைப்பகத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். 3 மணி நேரத்திற்க்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தகத்தை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். காலை 6 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரை முதல்வர் படைப்பகம் திறந்திருக்கும். இருந்தபோதும் மாணவர்கள் படிப்பதற்காக தங்களிடம் அதிகாலையில் கேட்டாலும், நள்ளிரவு கேட்டாலும் அவர்களுக்கு இங்கு படிக்க அனுமதி வழங்கப்படும்.
தொழில் முனைவோருக்கு இட வசதி: தொழில் முனைவர்களுக்கான பகிர்வு பணியிட மையம் கீழ்தளத்தில் உள்ளது. தொழில் முனைவர்கள் ஆரம்ப கட்டத்தில் எந்த தொழிலையும் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கான இடத்திற்கான வாடகை, மின்சார கட்டணம் அவையெல்லாம் அவர்களால் கொடுக்க முடியாத நிலையில் இருப்பார்கள். இதுபோன்ற புதிதாக தொழில் துவங்க உள்ளவர்களுக்கு இருக்கும் வாடகை பணப் பிரச்சனைகளிலிருந்து விடுப்படும் வகையில் நல்ல சூழ்நிலையல் இடம், ஏ,சி, இலவச வைஃபை ஆகிய அனைத்து வசதிகளும் அமைத்து தந்துள்ளோம். ஒரே நேரத்தில் தொழில் முனைவர்கள் 38 பேர் அமர்ந்து பணிப்புரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”மக்கள் பணியே லட்சியம்.. மறுபடியும் ஆட்சி நிச்சயம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு மடல்!
மேலும் கீழ்தளத்தில் ஆலோசனைகள் செய்யும் வகையில் 3 கலந்தாய்வு கூடமும் அமைந்துள்ளது. ஒரு கலந்தாய்வு கூடத்தில் 6 பேரும்,மற்ற இரண்டு கலந்தாய்வு கூடத்தில் தலா 4 பேரும் அமர்ந்து ஆலோசனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒரு மணி நேரத்திற்க்கு கலந்தாய்வு கூடத்திற்க்கு 150 முதல் 250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவர்களுக்கு அரைநாளுக்கு 50 ரூபாயும் ஒரு நாளிற்க்கு 100 ரூபாயும் கட்டணமும், மாதத்திற்க்கு 2500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களில் உள்ள அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதால் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளதாக தெரிவித்தார். வீட்டிலிருந்து பணிப்புரியும் வேலை உள்ளவர்களும் வீட்டில் உள்ள தொந்தரவுகள் இருப்பதால் இங்கு வந்து பணிப்புரிகிறார்கள்.
முன்பதிவு வசதி: தொழில் முனைவர்கள் மற்றும் கல்வி மையத்தை பயன்படுத்த நினைக்கும் மாணவர்கள் ஆன்லைனில் பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையதளத்தில் சென்று முதல்வர் படைப்பகத்தில் பதிவு செய்ய வேண்டும். தனியார் பகிர்வு பணியிட மையங்களுக்கு அதிக கட்டணம் வசுலிக்கப்படுவதால், முதல்வர் படைப்பகத்திற்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொழில் முனைவர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக உணவு அருந்துவதற்க்கும் 2 வது தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,"என்று கூறினார்.
அமைதியான சூழல் : முதல்வர் படைப்பகத்தில் உள்ள கல்வி மையத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர் யேஷ்வந்த் ஈ டிவி பாரத்திடம் கூறுகையில், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். வீட்டில் படிக்கும் போது பல்வேறு இடையூறுகள் வரும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இங்கு இடையூறு இல்லாமல் நீண்ட நேரம் தொடர்ந்து படிக்க முடிகிறது.
மிகவும் அமைதியாகவும், உடன் நிறைய மாணவர்கள் படிப்பதை பார்க்கும் போது நமக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. நூலகம் இருந்தாலும் கூட இங்கு நல்ல சூழ்நிலை உள்ளது, நிறைய புத்தகங்கள் உள்ளது மேலும் தேவையான புத்தகங்கள் வைப்பதாக கூறியுள்ளதாக கூறினார். இலவச வைஃபை இருப்பதால் அதையும் பயன்படுத்த முடிகிறது.தனியார் இடங்களில் வாங்கும் கட்டணத்தை விட மிகவும் குறைவான வகையில் கட்டணம் உள்ளது" தெரிவித்தார்.
ஆன்லைனில் ஃப்ரீலான்ஸராக பணிப்புரியும் செந்தில் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "தனியார் பகிர்வு பணியிட மையம் வாடகை மாத கட்டணம் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக தான் இருக்கும் ஆனால் இங்கே மாதக்கட்டணம் 2500 ரூபாய் அளவே உள்ளது, கழிவறை வசதி, உணவு அருந்தும் இடம் என அனைத்து வசதிகளும் உள்ளது ஆன்லைனில் ஃப்ரீலான்ஸர் ஆக பணிபுரிந்து வருவதால் பகிர்வு பணியிட மையம் பயனுள்ளதாக உள்ளது. வீட்டில் பணிப்புரியும் போது மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் முதல்வர் படைப்பகத்தில் இலவச வைஃபை உள்ளதால் பணி செய்வது எளிதாக உள்ளது" என்றார்.
தொழில் முனைவர்கள் முதல் போட்டித்தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் வரை பயன்படுத்திக்கொள்ளும் இந்த முதல்வர் படைப்பகம் இன்னும் சில காலத்தில் பல்வேறு தொழிலதிபர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் உருவாக்க போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்