சென்னை: வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி இன்று (ஏப்.30) வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள குயின் மேரி கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வுகளும் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கலாநிதி வீராசாமி, "இங்கு இருக்கும் ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. இங்குள்ள அறைகள், நுழைவாயில் மற்றும் பின்புறம் இருக்கும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பாக இருக்கும் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் ஒரு சிறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கொடுப்பது இல்லை என்று. அதைப் பரிந்துரை செய்து, கோரிக்கையை நிறைவேறினால் சிறப்பாக இருக்கும்.
சிசிடிவி கேமராவை பொறுத்தவரையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 4 கேமராக்கள் என 6 சட்டமன்றத் தொகுதிக்கு மொத்தம் 24 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு சிஆர்பிஎஃப் போலீசார் என மொத்தம் 12 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து, நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த சிசிடிவி கேமரா கோளாறு தொடர்பான கேள்விக்கு, "மின்சாரம் இல்லாத போது சிசிடிவி கேமரா வேலை செய்யாது. அந்த வேலையில் இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு எவ்வளவோ தேர்தல் ஆணையம் செலவு செய்கிறது. ஒரு ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் பொருத்து ஒன்றரை மாதத்திற்கு வைத்தால் எந்த சந்தேகமும் ஏற்படாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏற்காடு மலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து: சிறுவன் உட்பட 4 பேர் பலி! - Yercaud Bus Accident