சென்னை: திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்தவர் லோகேஷ், இவர் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வியாசர்பாடி, எம்கேபி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் வீடியோ பதிவு செய்யும் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது திருமண நிகழ்வுகளை வீடியோ எடுக்கும் பணிகள் முடிந்த பிறகு, தனது விலை உயர்ந்த வீடியோ கேமராவை ஒரு பேக்கில் போட்டு, அதனை அந்த திருமண மண்டப அலுவலகத்தின் அருகில் வைத்துவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார்.
அப்போது கேமரா பேக்கை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சாப்பிட்ட பிறகு வந்த லோகேஷ், கேமரா பேக் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கேமரா திருடுபோனது குறித்து லோகேஷ், வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது கேமரா பேக்கை மர்ம நபர் ஒருவர் தூக்கிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. திருடப்பட்ட கேமரா 5 லட்சம் ரூபாய் மதிப்புடையது என லோகேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கேமராவை திருடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: எத்தியோப்பியாவில் இருந்து ரூ.10 கோடி மதிப்புடைய கொக்கைன் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்! - Cocaine seized