சென்னை: நாடு முழுவதும் கோடைக் காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெப்பம் குறித்து வானிலை தன்னார்வலர் ஸ்ரீ காந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "எல்நினோவைத் தொடர்ந்து வரக்கூடிய கோடைக் காலத்தில் வெயில் சற்று அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது.
இதே போல், கடந்த 2016ஆம் ஆண்டும் வெயில் சற்று அதிகமாகப் பதிவானது. எல்நினோவிற்கு அடுத்த ஆண்டாக அமைந்ததால் 2016 ஆம் ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதே போல் மலைப் பிரதேசங்களிலும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் பதிவாகி இருக்கிறது.
மேற்கத்திய இடையூறு கழகம் காரணமாக வட இந்தியப் பகுதிகளில், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மார்ச் மாதத்திற்குப் பின் வாரத்திற்கு ஒரு மேற்கத்திய இடையூறு கழகம் வருவதால், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் மழை பொழிந்து மறுபடியும் வட இந்திய நாடுகளில் மழை பொழிகின்றன.
தென்னிந்தியத் தீபகற்பத்தை பொறுத்தவரையில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. மத்திய, வட இந்தியப் பகுதிகளில் இந்தாண்டு தற்போதைய நிலை வரை வெப்பம் இயல்பை விடக் குறைவாகத் தான் காணப்படுகிறது.
அதற்கு காரணம் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்பகுதிகளில் மழை பொழிகின்றது. இந்த மேற்கத்தியக் கழகம் குறைந்ததற்குப் பின்னால் வட, மத்திய இந்தியப் பகுதிகளில் எப்போதும் போலக் கோடைக் காலம் துவங்கும்.
கடலோரப் பகுதிகளில், தற்போது வரை வெயில் சற்று குறைவாகத் தான் பதிவாகி இருக்கிறது. கடல் பகுதியை ஒட்டி சென்னை இருப்பதால், சென்னையில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் காற்றில் வெப்பம் அதிகளவு உணரக்கூடியதாக இருக்கிறது.
வெப்ப அலை பொறுத்தவரையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அதற்கு ஒரு விளக்கத்தை வைத்திருக்கிறது. சமவெளிப் பகுதிகளில் இரண்டு நாட்கள் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகவும், இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெயில் பதிவானால் அப்பகுதியில் வெப்ப அலை வீசக் கூடும்.
சென்னையில் தற்போது வரை 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை எனவே வெப்ப அலைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால், உட்புற பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுகின்றது. இதற்கு காரணம் இயல்பை விட 4-5 டிகிரி அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருப்பதால் வெப்ப அலை வீசுகின்றது. வெப்பம், மழை ஆகியவை கடலின் வெப்பத்தைப் பொறுத்து அமைகிறது. கடல் வெப்பமடைவது அன்றாட நிகழ்வில் பிரதிபலிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதிப்பெண் குறைவு காரணமாகக் கல்லூரி மாணவி தற்கொலை; சக மாணவர்கள் போராட்டம்! - College Girl Committed Suicide