மதுரை : மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் இன்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிறைவுற்ற நிலையில், கடந்த சில வாரங்களாக மதுரையை கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை அவனியாபுரம், வெள்ளக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடும் வெப்பம் காரணமாக திடீர் தீ ஏற்பட்டதாக" தெரிவித்தனர்.
இதையும் படிங்க : உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதில் முதல்வருக்கு என்ன தயக்கம்? - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேள்வி! - DMK coral festival
பொதுவாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பொழிவது வழக்கம். ஆனால், பருவநிலையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக பருவமழை பொழிவு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
மதுரையை பொறுத்தவரை வடகிழக்கு பருவக்காற்றின் போதுதான் ஓரளவிற்கு மழைப்பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்றில் ஓரளவிற்கு மழைப்பொழிவைப் பெற்றது. ஆனாலும், மதுரையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லாமல் வறண்டே காணப்படுகிறது. இதுவரை செப்டம்பர் மாதத்தில் இல்லாத வகையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இன்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு வெப்ப அளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.