சென்னை : வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கி தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது.
இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறி உள்ளது. இந்த புயல் ஒடிசாவிற்கும் - மேற்கு வங்கத்திற்கும் இடையே உள்ள கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்திருந்தது.
இந்த புயல் குறித்து வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்து சிறப்புப் பேட்டியில், "வங்கக்கடலில் புதியதாக உருவாக்கியுள்ள புயல் காரணமாக தமிழகத்திற்கும், சென்னைக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த புயல் காரணமாக உள் மாவட்டங்களான சேலம், திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே மழை இருக்கும்.
இதையும் படிங்க : இந்த ஏரியாவில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகும் மழை! குடை எடுக்காம வெளியே போயிடாதீங்க மக்களே!
மேலும், புயல் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு உள் மாவட்டங்களில் மழை பெய்தாலும், இந்த மழையானது படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அக் 31ம் தேதி வரை கனமழை இருக்காது. புயல் காரணமாக காற்றின் திசை மாறுவதால் மழைக்கான வாய்ப்பு தற்போது இல்லை.
இந்த புயல் கரையை கடந்த பிறகு காற்றின் திசையில் இருந்து மீண்டு சீராவதற்கு இரண்டு, மூன்று நாட்கள் ஆவதால் அக் 31ம் தேதி வரை உள்மாவட்டங்களுக்கு மட்டும் மழை பெய்யும். மேலும் சென்னையை பொருத்த வரையில் இரவு மற்றும் காலை நேரத்தில் லேசான மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் புயலால் காற்றின் திசை மாறி மீண்டும் சீராவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்பதால் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்