திருநெல்வேலி: கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை நீடிப்பதால் சேர்வலாறு அணை ஒரே நாளில் 29 அடியும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாலும், சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு (Red Alert) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்றிலிருந்தே நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு நீர் நிலைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், பலவேறு குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மளமளவென உயரும் அணை நீர்மட்டம்:
அதாவது, இதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்து 76.50 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 6,426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்று, 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை ஒரே நாளில் 29 அடி உயர்ந்து 97.34 அடியாக உள்ளது. மேலும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 87.28 அடியாக உள்ளது. தற்போது, அணைக்கு வினாடிக்கு 6,686 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தொடர் மழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொட்டித் தீர்க்கும் பேய் மழை:
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ராம நதி, கடனா நதியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், காட்டாற்று வெள்ளம் என தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதனால், வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு செல்கிறது. மேலப்பாளைம் கருப்பந்துறை பாலத்தை தண்ணீர் மூழ்கடித்துச் செல்கிறது. அதுபோன்று, நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலையும் வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.
இதையும் படிங்க: நேரலை: இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 50 செ.மீட்டரும், நாலு முக்கு - 26.8 செ.மீட்டரும். வீரவநல்லூர் - 26.2 சென்டி மீட்டரும், சீதபற்பநல்லூரில் 26.2 செ.மீட்டரும், சுத்தமல்லியில் 24.1 செ.மீட்டரும், வி.கே.புரம், பாப்பாக்குடி பகுதியில் 21 செ,மீட்டரும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. மேலும், இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வரும் பேய் மழையால், நெல்லை மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு:
குறிப்பாக நெல்லை மாவட்டம் முக்கூடலிலிருந்து இடையால் செல்லும் சாலையில் இடுப்பளவுக்கு செல்லும் தண்ணீரால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பாறைகள் உருண்டு வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தாமிரபரணி ஆற்றில் இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மலையால் காற்றாட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மக்களுக்கு எச்சரிக்கை:
இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50,000 கன அடி வரை தண்ணீர் சேர்வதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணை ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.