தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள முதல் போக சாகுபடிக்காக விநாடிக்கு 900 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் சிறிய மதகுகள் வழி சென்று பெரியார் பிரதான கால்வாய் வழியாகச் செல்லும் இந்த தண்ணீரை தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களான ஷஜீவனா, சங்கீதா, எம்.என்.பூங்கொடி ஆகியோர் தண்ணீருக்கு மலர் தூவி திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் உடன் இருந்தனர். அணையில் நீர் இருப்பை பொறுத்து மொத்தம் 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரின் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட ஆட்சியர்களும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் தேனி மட்டுமல்லாது, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கடந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால், நவம்பர் மாதத்தில் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு கிடைத்துள்ளது.
இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாசனப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் சென்று சேர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன"... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!