நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சியில் 339 மில்லி மீட்டர் மழையும், அப்பர்பவானியில் 217 மில்லி மீட்டர் மழையும் எமரால்டு பகுதியில் 125 மில்லி மீட்டர் மழையும்,குந்தா பகுதியில் 108 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதால் குந்தா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கட்லாடா, ஒசஹட்டி, தங்காடு தோட்டம், பிக்குலி நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி, குந்தா அணையின் முழு கொள்ளளவான 89 அடியிர் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுவதால் கரையோரங்களில் கால் நடை மேய்சலில் ஈடுபடுபவர்கள், மற்றும் விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே போல, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 120 அடி கொண்ட ஆழியார் அணை உள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காடம்பாறை அனைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை அடுத்து காடம்பாறை அணையில் இருந்து அப்பர் ஆழியார் அணைக்கு 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நவமலை ஆற்றில் பாலத்து பகுதியில் ஒட்டி தண்ணீர் செல்லும் நிலையில் பாலம் முங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணை தற்போது 95.80 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கவி அருவி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்து நாட்கள் ஆன நிலையில் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழியாறு அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.