தருமபுரி: கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜா சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. மேலும், இந்த அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதன் காரணமாக, காவிரியில் தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு நேற்று வரை 54 ஆயிரம் கன அடியாக இருந்தது. தற்போது, படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, மேலும் 9 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து 74 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கபினி அணையிலிருந்து வினாடிக்கு 17 ஆயிரத்து 491 கன அடியும், கிருஷ்ணராஜா சாகர் அணையிலிருந்து 52 ஆயிரத்து 20 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதி முழுவதும் பரந்து விரிந்த வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. அதன் ட்ரோன் காட்சிகள் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்துள்ளது.
தற்போது, மெயின் அருவி, சினிய அருவி, ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஆகையால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று ஏழாவது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!