தேனி: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாகவும், இந்தியாவில் ஆறாவது உயரமான அருவியாகவும் திகழ்வது எலி வால் அருவி.
இந்த அருவி கொடைக்கானல் செல்லும் சாலையில், டம்டம் பாறை பகுதியின் எதிரே காணப்படுகிறது. மேலும், எலி வால் அருவியில் கடந்த 3 மாதங்களாக முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதன் காரணமாக, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எலி வால் அருவியின் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், தற்போது கடந்த 3 நாட்களாக தேனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்து வந்ததால், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் எலி வால் அருவியின் இயற்கை அழகை கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ரசித்து, அதன் முன் நின்று செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: “இந்தியா கூட்டணி வெற்றிக்கு நடுநிலையாளர்கள் போர்வையில் உலா வருபவர்கள் அதிகம்”- வானதி சீனிவாசன் காட்டம்! - Vanathi Srinivasan