ஈரோடு: தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராஜகோபால சுன்காரா தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பேசுகையில், "ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 2 ஆயிரத்து 663 வாக்குப்பதிவு இயந்திரமும், 2 ஆயிரத்து 663 கட்டுப்பாட்டு இயந்திரமும்,2 ஆயிரத்து 285 வி.வி.பேட்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் இந்த பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் டோல்ப்ரீ எண் மூலம் 21 புகாரும், சி-விஜில் செயலி மூலம் பத்து புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக 93 லட்சத்து 23 ஆயிரத்து 078 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், ஆவணங்கள் கொடுத்து 22 லட்சத்து 66 ஆயிரத்து 448 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இது தேர்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களின் பணியைச் செய்து வருகின்றனர்.
எனவே, 50 ஆயிரத்திற்கு மேலே ரொக்கம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். சத்தியமங்கலத்தில் குன்றி,கடம்பூர், குத்தியாலத்தூர், தாளவாடி மற்றும் பர்கூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குத் தேர்தலுக்கு முந்தைய நாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் அழைப்பு..! - Governor RN Ravi Invited Ponmudi