தஞ்சாவூர்: கும்பகோணம் துவரங்குறிச்சி கீழத்தெருவை பூர்வீகமாக கொண்டவர் எஸ்.ஆர் ராதா. இவர் கும்பகோணம் நகராட்சிமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பல்வேறு வாரியங்கள் தலைவராகவும், எதிர்கட்சி தலைவர் என பல்வேறு அரசு பொறுப்புகளை ஈடுப்பட்டவர்.
இவர் சிறு வயது முதல் பகுத்தறிவாளராக வாழத்தொடங்கி, இறுதி வரை எளிமையான மனிதராகவே மறைந்தார். மேலும் எஸ்.ஆர் ராதா மற்றும் அவரது மனைவி ருக்மணி மறைவிற்கு பிறகு இருவரின் உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் எஸ்.ஆர் ராதா வாழ்ந்த பூர்வீக வீட்டை அவரது குடும்பத்தினர் தற்போது எஸ்.ஆர் ஸ்ரீ வைபவ் ஹால் என்ற பெயரில் நவீன திருமண மண்டபமாக உருமாற்றியுள்ளனர். இதனை மறைந்த எஸ்.ஆர் ராதாவுடன் நெருங்கி பழகிய, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தரான முனைவர் கோ.விசுவநாதன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் விஐடி துணை தலைவர் ஜி வி செல்வம், தொழிலதிபர்கள் ரதிமீனா, பி.எஸ் சேகர், ராயா குரூப்ஸ் ஜி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய விஐடி வேந்தர் கோ விசுவநாதன், எனக்கும் மறைந்த எஸ்.ஆர் ராதவிற்குமான உறவு என்பது 60 ஆண்டுகளாக உள்ள அழகிய பந்தம்.
சிறுவயதிலேயே பகுத்தறிவு கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் எஸ்.ஆர் ராதாவும் இறுதி வரை அதே கொள்கையுடன் காமராஜர், அண்ணாவை போல எளிமையாகவும் வாழ்ந்து மறைந்தவர். நானும் அதே பகுத்தறிவு கொள்கைகளுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.
இதையும் படிங்க: TNSET தேர்வு எப்போது? நெல்லை மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர் முக்கிய தகவல்!
பலர் வயது கூடினால், பணம் சேர்ந்து விட்டால் அந்த கொள்கையில் இருந்து மாறி விடுவார்கள். உயர்கல்வியில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதாவது இந்தியாவில் உயர்கல்வி பெறுபவர்கள் 27 சதவீத பேர்தான். இதில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 88 சதவீதம் பெற்றுள்ளது. எனவே தான் இந்திய அரசு உயர்கல்வியில் 50 சதவீதத்தை எட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. ஆனால் தமிழகம் ஏற்கனவே இதில் 50 சதவீதத்தை எட்டிவிட்டது.
தொடர்ந்து வேந்தர் கோ.விசுவநாதன், எஸ்.ஆர் ராதா அறக்கட்டளை சார்பில் 15க்கும் மேற்பட்ட கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 ஆயிரம் எஸ்.ஆர் ராதா குடும்பத்தினர் சார்பில் வழங்கினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை எஸ்.ஆர் ராதாவின் மகன்கள் எஸ்.ஆர் ஆனந்தன், எஸ்.ஆர் அன்புச்செல்வன், மகள்கள் ராணி சுரேந்தர், வெற்றிச்செல்வி சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.