விருதுநகர்: தென்தமிழகத்தை பொறுத்த வரையில் தற்போது பலரும் உற்று நோக்கும் தொகுதியாக மாறியிருக்கும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தமிழ்நாட்டிற்கு காமராஜர், எம்.ஜி.ஆர் என இருபெரும் முதலமைச்சர்களை கொடுத்த தொகுதி என்ற பொருமையை பெற்றுள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த 2009ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது. இதில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை என விருதுநகரின் 4 சட்டமன்றத் தொகுதியும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் என மதுரை மாவட்டத்தின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
தொகுதி தேர்தல் வரலாறு: சிவகாசி நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1961 முதல் 2004ம் ஆண்டு வரை 11 மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் அதிமுக 4 முறையும், மதிமுக 3 முறையும், காங்கிரஸ், சுதந்திரக் கட்சி, சிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 2009, 2014,2019 என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு 4,70, 883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,16, 329 வாக்குகளை பெற்றார்.
பரமசிவ ஐயப்பன் 1,07,615 வாக்குகளை பெற்று, அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய வேட்பாளர்கள் தலா 50 ஆயிரத்திற்கும் மேலும் வாக்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை களம் எப்படி?: விருதுநகர் தொகுதியை பொருத்தவரை தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஒருமுறை கூட நேரடியாக போட்டியிட்டது கிடையாது. தனது கூட்டணி கட்சிகளுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்கீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி மூன்றாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் எண்ணிக்கை: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 600 ஆக இருந்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,093, பெண் வாக்காளர்கள் 7,56,377 மூன்றாம் பாலினத்தவர் 130 உள்ளனர். இத்தேர்தலில், 10,74,735 வாக்குகள் (74.7%) பதிவாகின.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் 7,33,217 ஆண் வாக்காளர்கள், 7,68,520 பெண் வாக்காளர்கள், 205 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,01,942 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த தேர்தலில் 10,54,634 வாக்குகள் (70.22%) பதிவாகின.
களம் கண்டுள்ள பிரபல வேட்பாளர்கள்: நான்கு முனை போட்டி நிலவும் விருதுநகரில், திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் சீட்டு ஒதுக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கெளசிக்கும் போட்டியிடுகின்றனர்.
நட்சத்திர தொகுதி: தற்போதைய தேர்தலில் களம் கண்டுள்ள வேட்பாளர்களான ராதிகா சரத்குமார், 90களில் இருந்து திராவிட கட்சிகளுக்கு நட்சத்திரப் பேச்சாளராக வாக்குகள் சேகரித்து இருக்கிறார். அதேபோல் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றியிருந்தபோது அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன், அரசியல் பரப்புரையில் ஈடுப்பட்டார். ஆனால் தற்போது, இருவருமே ஒரே தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் களம் இறங்கியுள்ள விஜயபிரபாகரனை ஆதரித்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயகாந்தின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை தொகுதியில் இருப்பதால் தனது மகனை விருதுநகரில் களம் இறக்கியுள்ளார் பிரமேலதா விஜயகாந்த். அதேபோல, தனது மகனுக்காக இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அவர் படுதீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இருசக்கர வாகனத்தில் நடிகர் சரத்குமாருடன் ஜோடியாக வந்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார், பல நலத்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.நட்சத்திர வேட்பாளர்களை காணும் இந்த தொகுதியில் ஜொலிக்கப்போவது யார் என்பது வரும் ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.