விருதுநகர்: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், சிவகாசி கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் இன்று (மார்ச் 24) கலந்து கொண்டார். அதன் பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “இங்கிருக்கும் கட்சிகளுடன் சண்டையிட நான் வரவில்லை. அவர்களைப் பற்றி தவறாக பேசுவதற்கு நான் இங்கு ஆளில்லை. நாங்கள் அது போன்ற அரசியல் செய்ய மாட்டோம். நாகரீகமாக உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்வோம்” என பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை, பாஜக தலைமையில் இருந்து தேர்ந்தெடுத்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். விருதுநகர் தொகுதி மக்களுக்கு செய்வதற்கு நிறைய உள்ளது, மக்களுக்குத் தேவையானதை நான் செய்வேன்.
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், தொகுதி மக்களுக்கு ஆற்றிய செயல்பாடுகள் குறைவாக உள்ளது. விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் போலத்தான், சின்னப் பையன் நன்றாக இருக்க வேண்டும்.
நடக்க இருக்கும் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அல்ல, நாடாளுமன்றத் தேர்தல். நாடு இந்த தேர்தலில் நமக்காக என்ன செய்ய உள்ளது என்பதைத்தான் பார்க்க வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், பட்டாசு தொழிலாளர்கள், பட்டாசு தொழிலை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது, இன்னும் நாங்கள் உழைக்க வேண்டும்” என்றார்.
மேலும், பொதுமக்களிடம் உரையாற்றிய ராதிகா சரத்குமார், பட்டாசு விபத்தில் இன்னும் ஒரு உயிரிழப்பு நிகழாமல் தடுத்து நிறுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார்.