கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கலங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தனது காரில் கோவையிலிருந்து, கலங்கல் பகுதியில் உள்ள தனது சென்று கொண்டிருந்தார்.
அப்போது சூலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த பேக்கரி முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை உடைத்து, பேக்கிரியின் சுவரில் மோதி நின்றது. காரில் இருந்த ஏர் பேக்குகளால் ஜெகதீஸ்வரன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும், விபத்தில் காரின் எஞ்சின் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது, எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. அதன் பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காரில் இருந்து வந்த புகையைத் தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தினார்.
அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூலூர் போலீசார், காரை அப்புறப்படுத்தி, விபத்தில் காயமடைந்த ஜெகதீஸ்வரன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. மீன்கள் விலை உயர வாய்ப்பு!