சென்னை: சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஈசிஆரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது, அதே ஜிம்மில் இருந்த மணிபாலன்(30) என்ற இளைஞர் அப்பெண்ணிடம் நண்பர்களாக பழகலாம் எனக் கேட்டுள்ளார்.
அதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்த போது, மணிபாலன் திடீரென ஒருநாள் நான் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு அப்பெண்ணும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே நான் உன்னைத் தான் காதலிக்கிறேன், உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், அப்பெண் எனக்கு உண்மையாக இல்லை என கண்ணீர் மல்க பல காதல் வசனங்களைப் பேசியுள்ளார்.
ரூ.19 லட்சம் மோசடி: முதலில் மறுப்பு தெரிவித்த அப்பெண், நாளடைவில் இளைஞரின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, இளம்பெண்ணிடம் இருந்து மணிபாலன், சிறுகச் சிறுக சுமார் ரூ.19 லட்சம் வரை பணத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். அதனால் அப்பெண் கருவுற்றதாகக் கூறப்படுகிறது.
மாத்திரையால் கருவைக் கலைத்த இளைஞர்: அதனை மணிபாலனிடம் தெரிவித்தபோது, தற்போது நமக்கு குழந்தை வேண்டாம், சில மாதங்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி மாத்திரை மூலம் பெண்ணின் கருவைக் கலைத்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அப்பெண் மீண்டும் கருத்தரித்ததால், திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆகையால் கடந்த பிப்.21ஆம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் குன்றத்தூர் முருகன் கோயிலில் ரகசிய திருமணம் செய்துள்ளனர்.
அதையடுத்து அப்பெண்ணை ஹனிமூன் செல்லலாம் என அழைத்துச் சென்று, மீண்டும் மாத்திரை மூலம் கருவைக் கலைத்துள்ளார். பின்னர், உன்னை எனக்கு பிடிக்கவில்லை எனவும், வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் எனது குடும்பத்தினர் நமது திருமணத்தை ஏற்கமாட்டார்கள் எனவும், பழைய காதலியையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி பெண்ணின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்ட மகளிர் போலீஸ்: செய்வதறியாமல் தவித்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர், மணிபாலன் தன்னை காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு, தன்னுடன் வாழாமல் முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காவல் நிலையம் சென்று அப்பெண் கதறியுள்ளார்.
அப்போது, "கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் தான், நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்" என காவல் ஆய்வாளர் சுமதி கராராகக் கூறியுள்ளார். அதனால் ரூ.20 ஆயிரம் பணத்தை அப்பெண் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டும் நடவடிக்கை எடுக்காததால், அப்பெண் குடும்ப நல நீதிமன்றத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் சென்று புகார் அளித்ததும், அங்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல்டி அடித்த காவல் ஆய்வாளரின் வைரல் ஆடியோ: அதைத் தொடர்ந்து, அப்பெண் செல்போனில் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளேன் என மகளிர் ஆய்வாளர் சுமதியிடம் கூறியபோது, அங்கெல்லாம் ஏன் செல்கிறாய். நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோமா? என பவ்வியமாகத் தெரிவித்துள்ளார். அதற்கு, நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் நான் அங்கே சென்றேன் என அப்பெண் தெரிவித்துள்ளார். உடனே நீ கொடுத்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன் என தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பான ஆடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் இளம்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு, 19 லட்சம் பணத்தையும் வாங்கிக் கொண்டு பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுப்பதுடன், தற்போது இன்னும் 3 தினங்களில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த திருமணத்தை நிறுத்தி தன்னிடம் சேர்ந்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்