சென்னை: கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தனது சமூக வலைத்தளத்தில் “தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை” என பதிவிட்டிருந்தார். இதற்கு எம்பி தயாநிதி மாறன் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில், இன்று (வியாழக்கிழமை) பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், அங்குள்ள லிப்டில் பயணித்த நிலையில், எதிர்பாராத விதமாக அதில் மாட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற பணியாளர்களும், வினோஜ் பி செல்வத்தின் வழக்கறிஞர்களும் இணைந்து லிப்டில் இருந்து பத்திரமாக அவரை மீட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக உள்ளார். தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு 3.5 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் தற்போது இந்த தேர்தலில் 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, 8 சதவீதமாக வாக்கு வங்கி பாஜவிற்கு அதிகரித்துள்ளது.
மத்திய சென்னை தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றி. மிகுந்த கடுமையான சூழலில் பண பலத்தையும், படை பலத்தையும் எதிர்த்து தனியாக நின்று போட்டியிட்டு பாஜக வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. மத்திய சென்னையில் 24 சதவீதம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நான்கு மடங்கு வளர்ச்சியை மத்திய சென்னையில் கண்டுள்ளோம் என்றார்.
நான்கு மாதத்தில் மழை பாதிப்பு ஏற்படும். எத்தனை முறை திமுகவுக்கு வாக்களித்தாலும், திமுக பிரியாணி போட்டலும், அரிசி மூட்டை கொடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றப்போகிறது. 2026ஆம் ஆண்டு தமிழக மக்களை பாஜக மீட்டெடுக்கும்.
திமுக எம்பி கனிமொழி, அவரது கட்சி நிர்வாகிகளை பற்றி தெரிந்து கொள்ளட்டும். எங்கள் கட்சியைப் பற்றி கவலைகொள்ள அவசியமில்லை. திமுகவிற்கு இந்த தேர்தலில் ஏழு சதவீத வாக்கு வங்கி சரிந்துள்ளது. மக்களுக்கு திமுக மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் பிரிந்து போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி உள்ளது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருந்தால் திமுக காணாமல் போயிருக்கும். பாஜக பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. மக்களிடையே பாஜகவிற்கு பெரிய செல்வாக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டதாலேயே திமுக வென்றுள்ளது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என்தை வாக்கு சதவீதம் காட்டுகிறது. திமுகவிற்கு உதவுவதற்காக அதிமுக தனியாக போட்டியிட்டதாக சந்தேகம் எழுகிறது. 2026ஆம் ஆண்டு தேதலில் பாஜகவிற்கு இன்னும் கூடுதலாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: “மாநிலத் தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது” - அண்ணாமலை திட்டவட்டம்! - BJP Annamalai