விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக நேற்று (மே 8) ஆர்ஓ மற்றும் ஆட்சியர் சி.பழனியிடம் மனு அளித்த ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்ட்ராங் ரூம்களை கண்காணிக்க தன்னால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி எலக்ட்ரானிக் சிசிடிவி கவரேஜ் தடைபடுவது குறித்து என்னிடம் தெரிவித்தார்.
மேலும், திண்டிவனம் மற்றும் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகளில் நேற்றைய தினம் காலை 7.28 மணிக்கு சிசிடிவிகள் செயல்படாததால், பழுதுபார்க்கப்பட்ட பிறகு காலை 8.10 மணிக்கு மீண்டும் பதிவு செய்யத் தொடங்கியது. ஆர்.ஓ., போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கேமராக்களை ஆய்வு செய்து, சிசிடிவிகளைப் பராமரிக்கும் நபரிடம் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு தான் நேரில் சென்று விசாரணை நடத்தினேன். சிசிடிவிகளை பராமரிக்கும் நபர், மின்னல் மற்றும் இடி காரணமாக கவரேஜில் தடை ஏற்பட்டதாக தெரிவித்தார். சிசிடிவி சுமார் 42 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என்றாலும், 2 நிமிடங்கள் மட்டுமே பதிவு தடைபட்டுள்ளது. மேலும், மே 3ஆம் தேதி சுமார் 30 நிமிடங்களுக்கு சிசிடிவியில் தடை ஏற்பட்டதாகவும், தொடர்ச்சியாக சிசிடிவி பழுதடைவது தேவையற்ற பீதியை உருவாக்கியது.
EVM சேமிப்புக் காலம் முழுவதும் ஸ்ட்ராங் ரூம்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகக் கூறியுள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி, மின்சார வாரியத் தலைவரிடம் தனித்தனியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு, ஜெனரேட்டர்கள் கையிருப்பு அமைக்கப்பட வேண்டும். எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஆர்ஓ பின்பற்றி, ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பழனி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, “திண்டிவனம் மற்றும் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 8 கேமராக்கள் 45 நிமிடங்கள் செயலிழந்துள்ளது.
மேலும், திடீரென பெய்த கனமழையில் இடி தாக்கியதால் கேமராக்களுக்கு செல்லும் ஜங்ஷன் பாக்சில் மின்பழுது ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு, மீண்டும் கேமராக்கள் இயங்கி வருகிறது. மேலும், ஒரு அறையில் 20 கேமராக்களில், 4 கேமராக்கள் பழுது ஏற்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், மீண்டும் பழுது ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீர் கோளாறு..காரணம் என்ன? - Lok Sabha Election 2024