விழுப்புரம்: கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், திண்டிவனம் அடுத்த வானூா் வட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், வி.ஜெயசந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது, 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் இறந்துவிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 67 பேரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) வரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், 22 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாகப் பிறழ் சாட்சி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஹெர்மிஸ் தலைமையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், கோதகுமாா் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட 3 போ் மட்டும் நேரில் ஆஜராகவில்லை.
ஆகையால், அமைச்சர் பொன்முடி மீதான இவ்வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஹெர்மிஸ், வழக்கு விசாரணையை வருகின்ற 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.