தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில், புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பணியின் துவக்கமாகப் பேருந்து நிலைய அஸ்திவாரம் அமைப்பதற்கான காட்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக அனைத்து கட்டடங்களுக்கும் அஸ்திவார தூண்கள் அமைப்பதற்கு முறைப்படி கான்கிரீட் பாக்ஸ் என அழைக்கப்படும் இரும்புப் பெட்டி அல்லது மரச் சட்டத்தை வைத்து அடைத்து அதன் உள்ளே கான்கிரீட் கலவைகளைக் கொட்டி கான்கிரீட் தூண்கள் போடுவது தான் வழக்கம். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறாக, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைக்கப்பட இருக்கும் புதிய பேருந்து நிறுத்ததின் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணியில் கான்கிரீட் பாக்ஸ் அல்லது மரச் சட்டத்தை வைத்து கான்கிரீட் தூண் அமைக்காமல், செங்கல்லை ஒன்றன் மீது ஒன்று ஒழுங்கற்ற முறையில் அடுக்கி வைத்து அதன் உள்ளே இரும்பு கம்பியைப் பெயருக்குப் பொருத்தி கான்கிரீட் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, மழைக் காலத்தில் ஏற்படும் ஈரப்பதத்தால் பேருந்து நிலைய தூண்கள் வலுவடைந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேருந்து நிறுத்த கட்டுமான பணியின் போது செங்கல்லை அடுக்கி வைத்து கான்கிரீட் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது இந்த சம்பவம் குறித்த அப்பகுதியைச் சேர்ந்த நெட்டிசன்கள், "அட அப்பரசண்டிகளா...! கொரோனா பேட்ச் காண்ட்ராக்டரா இருப்பாரோ?" என கட்டுமான பணியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனி மாரத்தான் போட்டி குளறுபடி; ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு!