ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் திங்களூரில் தண்ணீர் பற்றாக்குறையால் ஊர்மக்கள் ஒன்றிணைந்து பொதுக்கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடியில் 10 ஊராட்சிகள் உள்ளன. பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றில் 2 பங்கு மக்கள்தொகை மலைப்பகுதியில் உள்ளனர். இப்பகுதியின், இயற்கையோடும், விலங்குகளுடனும் தினந்தோறும் வாழ்ந்து வரும் மக்கள், ராகி, மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
அப்பகுதிகளில் வசிக்கும் கால்நடை மற்றும் மக்கள் குடிநீர் தேவைக்காகக் குளம், குட்டையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள சில கிராமங்களில் ஆழ்குழாய் நிலத்தடி மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. அதேபோல், போர்வெல் தண்ணீரும் தீர்ந்துள்ளது. இதில் குறிப்பாக திங்களுர் ஊராட்சி மக்கள் கடந்த சில வாரங்களாக வாழ்வதற்குக் குடிநீர் இன்றி கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
கோடை வெப்பம் தாக்கம் காரணமாக, திங்களூர் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகளில் நீர் வறண்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுக் கிணற்றைத் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், ஊராட்சி நிர்வாகம் நிதியில்லை என்று கூறியதால், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கிணற்றைத் தூர் வாரி சேற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, சேறு அதிகமாக இருப்பதால் சேற்றுடன் தண்ணீர் இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேறும், சகதியுமாகத் தண்ணீர் இருப்பதால் இரண்டாவது நாளாக மக்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கிணறு கேர்மாளம் கிராமத்திலிருந்து 2 கிமீ தூரம் பள்ளத்தில் உள்ளதால், நீர் கிடைத்தாலும் அதனை 2 கிமீ தூரம் வரை சுமந்து செல்ல வேண்டும் என கிராம மக்கள் கவலை உடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: +2 ரிசல்ட்: பாடவாரியாக தேர்ச்சி, சென்டம் எடுத்தவர்கள் விவரம்! - TN 12th Results 2024