சென்னை: சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்று வட்டாரத்தின் 20 கிராமப்புறங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள், விலை நிலங்கள், நீர்நிலைகள், உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம், கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு, பள்ளி புறக்கணிப்பு, நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 751வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மே 1 தொழிலாளர்கள் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் நடைபெற்ற 7 கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
இருப்பினும், கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. அதன் காரணமாக, தொடர்ந்து நடைபெற்ற 6வது கிராம சபை கூட்டங்களை கிராம மக்கள் முழுவதுமாக புறக்கணித்து விமான நிலையம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 15, 78-வது சுதந்திர தினமான இன்று, கிராம மக்களின் தொடர் போராட்டமானது 752 நாட்களை எட்டியது. சுதந்திர தின விழாவாக இருந்தாலும், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மாநில அரசு தான் இடத்தை தேர்வு செய்தது என இந்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம சபை கூட்டத்தில் மீண்டும் எட்டாவது முறையாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய பெருந்தலைவரும், திமுக பிரமுகருமான கருணாநிதி, இந்த விமான கட்டுமானப் பணிகள் குறித்து பேச்சு இருக்கையில், விமான நிலையம் வரைபடத்திற்குள் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கிள்பாடி கிராமத்தில் அண்ணா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டி வரி பணம் வீணடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் விமான நிலையம் திட்டம் தொடர்பாக அனைத்து நடவடிக்கையும் மாநில அரசு எடுத்திருப்பதாக மத்திய விமான ஆணையம் பதில் அளித்த நிலையில், இந்த பாலம் கட்டும் நடைவடிக்கை எதற்காக தொடங்கியது என குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி! அரசின் அடுத்த திட்டம் என்ன?